search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் முறிந்து விழுந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
    X
    புதுக்கோட்டையில் முறிந்து விழுந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு - 30 நாட்களாகியும் மீள முடியாத புதுக்கோட்டை குக்கிராமங்கள்

    கஜா புயல் கடந்து சென்று இன்றுடன் 30 நாட்களாகியும் புதுக்கோட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குக்கிராம மக்கள் இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவிக்கின்றனர். #GajaCyclone
    திருச்சி:

    நவம்பர் 15 இரவை நினைத்தால் இன்னும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இதயம் நடுங்குகிறது. அன்று கஜா புயல் இம்மாவட்டங்களை கடந்து சென்றபோது அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களையும் கரைத்து விட்டுத்தான் சென்றது.

    1 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை, மா, பலா, தேக்கு, ரோஸ்வுட் மரங்கள், எலுமிச்சை, வாழை, பூஞ்செடிகள், லட்சக்கணக்கான பறவை, கால்நடைகள், லட்சக்கணக்கான வீடுகள் என அனைத்தையும் சூறையாடி விட்டு கஜா கடந்து சென்றது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்தியக்குழு, தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் கஜா புயல் தாக்கிய பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை கொடுத்து உதவியதோடு கரைந்து போன இம்மாவட்டங்களை மீட்டெடுக்க குரல் கொடுத்தனர்.

    தமிழக அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து மின் ஊழியர்கள், மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மத்திய அரசு ரூ.500 கோடிக்கு மேல் 2 கட்டமாக நிவாரண நிதியை ஒதுக்கி மீட்பு பணியை முடுக்கி விட்டது.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அங்கேயே தங்கியிருந்து பணிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். இந்நிலையில் கஜா புயல் கடந்து சென்று இன்றுடன் 30 நாட்கள் ஆகிய நிலையில் புதுக்கோட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குக்கிராமங்கள் இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, விராலிமலை தொகுதிகள் கடுமையாக கஜா புயலில் பாதிக்கப்பட்டது. அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளும் பாதிக்கப்பட்டது.

    தமிழகத்திற்கே பலாப்பழங்களை அள்ளிக்கொடுத்த கொத்தமங்கலத்தில் மொத்தமாக லட்சக்கணக்கான பலா மரங்கள் சாய்ந்து விவசாயிகள் வாழ்க்கையை சாய்த்து விட்டது. இன்னும் அங்கே இயல்புநிலை திரும்பவில்லை.

    ஆலங்குடியில் வாழை, கரும்பு பாதிக்கப்பட்டிருந்தது. மணல்மேல்குடி, கோட்டைபட்டினம், கறம்பக்குடி, புல்லான்விடுதி பகுதிகளில் கஜா புயல் தாக்கம் இன்னும் மீள முடியாமல் உள்ளது. இரவில் மட்டும் மின்சாரம் விநியோகிக்கும் கிராமங்கள் இன்னும் உள்ளன.

    பகலில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து கடந்த 30 நாட்களாக நிவாரண பொருட்களை குவித்து உதவிய மக்கள் இனி அரசு பார்த்துக்கொள்ளும் என திரும்பி விட்டார்கள்.

    விழுந்த தென்னை மரங்களுக்கு பதிலாக பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தென்னங்கன்றின் விலை ரூ.450-க்கு விற்கப்படுவது கஜா ஏற்படுத்திய தாக்கத்தை விட கடுமையாக உள்ளது என விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.



    விழுந்த தென்னை மரங்களை அகற்றவும், விழுந்ததற்கு இழப்பீடும் என அரசு ரூ.1100 வழங்கியுள்ளது. ஆனால் ஆட்களை வைத்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கே இந்த பணம் போதவில்லை என தென்னை விவசாயிகள் கூறுகிறார்கள்.

    பயிர் இன்சூரன்ஸ் காப்பீடு பெற விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கெடு போதவில்லை. மின்சாரம் இல்லாத நிலையில் ஜெராக்ஸ் எடுத்து, பணத்தை கட்டி விண்ணப்பிக்க முடியாமல் ஏழை விவசாயிகள் தவிக்கிறார்கள். தலையாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக்குறையில் பயிர் இன்சூரன்ஸ் பெறுவதில் விவசாயிகளுக்கு பிரச்சனைகள் உள்ளன.

    மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு 30 நாட்களுக்கு மேல் ஆகியும் முழுமையான மீட்சி அடைய முடியவில்லை.

    அரசு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் எதிர்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறும் புதுக்கோட்டை மக்கள் இப்போது கேட்பது ஒன்றே ஒன்றுதான் அது விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களையும், சுய உதவிக் குழுக்கள் பெண்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஒன்றை தான்.

    இதுகுறித்து அறந்தாங்கியைச் சேர்ந்த பரணி கார்த்திகேயன் கூறும்போது :-

    தென்னை இழப்பீடு குறைவாக உள்ளது. தென்னங்கன்றுகள் தட்டுப்பாடாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது. எனவே அரசு அந்தமான், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்னங்கன்றுகளை வரவழைக்கலாம்.

    குட்டை, நெட்டை கன்றுகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் விவசாயிகளுக்கு உள்ளன. பயிர் கடன், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் கஜா புயல் காயத்திலிருந்து மீள மருந்தாக அமையும்.

    இதற்காக இம்மாவட்ட மக்கள் போராடவும் முடிவெடுத்துள்ளோம். ஒரு குடும்பத்தில் அனைவரையுமே விபத்தில் பறி கொடுத்தது போன்ற இழப்பை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். மீள்வோம் என்ற நம்பிக்கையில் விவசாய நிலங்களில் கால்களை வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone

    Next Story
    ×