search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பஸ்களுக்கு, டீலக்ஸ் கட்டணம் வசூல்
    X

    வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பஸ்களுக்கு, டீலக்ஸ் கட்டணம் வசூல்

    டீசல் நஷ்டத்தை சரிகட்ட வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பஸ்களுக்கு டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தினமும் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஜனவரி மாதம் 20-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.62.94 ஆக இருந்தது.

    இன்று ஒரு லிட்டர் ரூ.79.50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு லிட்டர் டீசல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.

    இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஏற்கனவே பஸ் கட்டண உயர்வால் பயணிகள் கூட்டம் குறைந்து வருவாய் குறைந்து இருந்த நிலையில் இப்போது வரலாறு காணாத டீசல் விலை உயர்வால் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

    இந்த இழப்பை சரிகட்டுவதற்காக வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் கட்டணம் மறைமுகமாக மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தவிர விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய 6 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்படும் சுமார் 2500 சாதாரண பஸ்களின் கட்டணம் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சாதாரண பஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 58 பைசா எனவும், எக்ஸ்பிரஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 85 பைசாவும் அரசு நிர்ணயித்துள்ளது. வெளியூர்களுக்கு 6850 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர 2500 சாதாரண பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்திற்கு (வழித் தடத்திற்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது சாதாரண பஸ்கள் அனைத்திலும் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பஸ் கட்டணம் ரூ.120 ஆகும். தற்போது இந்த பஸ்கள் டீலக்ஸ் ஆக மாற்றப்பட்டதால் ரூ.175 கட்டணமும், அல்ட்ரா டீலக்ஸ் கட்டணமாக ரூ.200 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சீபுரம், விழுப்புரம், புதுச்சேரி, ஆற்காடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் தற்போது பயணிகள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்தால் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்தாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூந்தமல்லி- வேலூருக்கு ரூ.100 கட்டணமாகும். கோயம்பேடு- வேலூர் டிக்கெட் கட்டணம் ரூ.125 வசூலிக்கப்படுகிறது. எந்த இடத்தில் இருந்து பயணம் செய்கிறோமோ அதற்குதான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் பயணம் செய்யாத இடத்திற்கும் சேர்த்து அதிகமாக கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களை வதைக்கும் செயல் என்று தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டக்டர் இல்லாமல் டிரைவர்களை மட்டும் வைத்து பஸ்களை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் இந்த பஸ்களில் டிரைவரே டிக்கெட் கொடுத்து விடுவார்.

    இந்த திட்டத்திற்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் விலக்கி கொள்ளப்படுகிறது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கண்டக்டர் இல்லாத பஸ் சேவை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. #Tamilnews
    Next Story
    ×