search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசிய காட்சி.
    X
    ராசிபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசிய காட்சி.

    புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்- கமல்ஹாசன்

    புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் நீதிய மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    நாமக்கல்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    நாமக்கல் என்பது இந்தியாவின் பேருந்து நிலையம். இங்கு பெட்ரோல், டீசல் விலை குறித்து சில உண்மைகளை மக்களிடம் தெரிவித்தாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 44 டாலராக இருந்த போது பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

    கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இப்போது 100 டாலரை தாண்டி நிற்கிறது. பெட்ரோல் விலை ரூ.87 வரை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.4.5 லட்சம் கோடி என்பது எனக்கு வந்த தகவல். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.4.5 லட்சம் கோடி சம்பாதித்து வருகின்றனர்.

    இது மக்களுக்கு சென்றடைய வேண்டும், அதை நீங்கள் கேட்க வேண்டும். மக்களுக்கான புரட்சி தொடங்கிவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்கான அடையாளங்கள் இங்கே தெரிகிறது. அதற்கான தகவல்களை தர வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாகிறது.

    நான் சொல்லும் புரட்சி கத்தியின்றி, ரத்தமின்றி தான். நம் போராட்டங்கள் எல்லாம் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக் கொண்டிக்கிறது. இன்றும், என்றும் அப்படித்தான் இருக்கும்.

    என்னை முழு நேர அரசியல்வாதியா என சந்தேகப்பட்டு கேட்கின்றனர். நான் சென்ற பல இடங்களுக்கு, அரியணையில் ஏறி அமர்ந்திருக்கும் பலர் செல்வதில்லை என்பது தான் உண்மை. நான் தொடந்து திரைப்படங்களில் நடிப்பதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ என தலைப்பு போட்டு எத்தனை திரைப்படங்கள் வந்துள்ளன.

    அவரை விடவும் என்னை கேள்வி கேட்பவர்கள் முழு நேர அரசியல் வாதியா? எனக்கும் வைத்துக் கொண்டு, மக்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காகதான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

    முழு நேரமும் அரசியல் செய்து கொண்டு வேறு போக்கிடம் இல்லை என்றால், அவன் மக்கள் பணத்தில் அல்லவா கைவைப்பான். அரசியல்வாதி முழு நேரம் மக்களோடு தான் இருப்பான் என எதிர்பார்க்க கூடாது. அரசியல்வாதிகளுக்கும் தனியாக தொழில் இருக்க வேண்டும். திரைப்படத்தொழில் இருந்த என்னுடைய நேர்மை, அரசியலில் தொடரும்.

    மேடைப் பேச்சு அலங்காரத்தில் உண்மையை மறைக்க முடியாது. அவர்களை விட தெளிவாக பேசி விட முடியும் என்று நம்பவில்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களை விட கண்டிப்பாக என்னால் பல மடங்கு நேர்மையாக இருக்க முடியும். அதற்கு ஏதுவாக நீங்களும் நேர்மையாக இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாக இருந்தால் தான் நேர்மையான தமிழகம் உருவாகும்.

    பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடாதீர்கள். இதனால் அரசிடமிருந்து மக்களுக்கு சேர வேண்டியவை சென்று சேருவதில்லை. ஓட்டை பணத்துக்கு விற்கும் நிலை மாறினால், மக்களுக்கான தேவைகளை உரிமையோடு கேட்டுப்பெற முடியும்.

    கிராம சபை என்பது, சட்டமன்றம், பாராளுமன்றங்களில் எடுக்கும் முடிவு அளவிற்கு இணையான பலம் கொண்டது. என்னால் இயன்றவரை நான் என் கடமைகளை செய்கிறேன். உங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் செய்ய வேண்டும். படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்துவிட்டது. நீங்கள் உங்கள் கடமையை செய்தால், என் கடைமையை நான் ஆற்றுவது மிக, மிக எளிதாகும். நான் எதிர் பார்க்கும் நாளை நமதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருச்செங்கோடு பழைய பஸ்நிலையத்தில் அவர் பேசும்போது, இந்த ஊரில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலநிலை உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இந்த நிலை மாற மக்கள் நீதிமய்யம் பாடுபடும். தமிழகத்தில் நேர்மையை மதிக்கும் காலம் நெருங்கி வருகிறது, என்றார்.

    ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    எனக்கு ராசிபுரம் புதிது அல்ல. நற்பணி மன்றத்தினர், தொண்டர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். 3 தலைமுறை தொண்டர்கள் என இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடும்பத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததான முகாமை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். என்னுடன் 17 வயதில் நற்பணிகளை ஆரம்பித்தவர்கள், இப்போது அதே உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.

    ராசிபுரத்தில் 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துகிறோம் என்று கூறி ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாக காணப்படுகிறது. இதுவே அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி இருக்க வேண்டும்.

    தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூட பார்க்க முடிகிறது. நான் போகும் இடமெல்லாம், வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று பொதுமக்கள் கோபத்திலும், பொறுமையுடன் இருக்கிறார்கள். அதற்கான காலம் வந்துவிட்டது. குருசாமிபாளையம், அத்தனூர் பகுதியில் நெசவு தொழில் முடங்கி கிடப்பதாக எங்களுக்கு சேதி வந்து கொண்டு இருக்கிறது. அதை சரி செய்யும் காலம் விரைவில் வரும்.

    கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து போராட்ட களத்தில் குதிக்கும். அந்த போராட்டம் அமைதியாகவும், நியாயமாகவும் இருக்கும். புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×