search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலயுண்ட மகாலட்சுமி.
    X
    கொலயுண்ட மகாலட்சுமி.

    பள்ளிக்கரணையில் மனைவியை குத்தி கொன்ற கணவர்

    பள்ளிக்கரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் கணவரே குத்தி கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    பள்ளிக்கரணை பாரதிதாசன் 1-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. வேளச்சேரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ் மேரி என்ற மகாலட்சுமி. இவர்களது மகன்கள் குணால் (19), திரிஷ் (17).

    கிருஷ்ணமூர்த்தி தினமும் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதை மகாலட்சுமி கண்டித்து வந்தார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மதுகுடித்தபடியே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவி மீது சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சண்டை போட்டதாக தெரிகிறது.

    நேற்று இரவும் கிருஷ்ண மூர்த்தி-மகாலட்சுமி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கணவரை மகாலட்சுமி கடுமையாக திட்டினார். இதனால் கிருஷ்ணமூர்த்தி கடும் ஆத்திரம் அடைந்தார்.

    அதன்பின் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு எழுந்த கிருஷ்ணமூர்த்தி சமையல் அறைக்கு சென்று காய்கறி வெட்டும் கத்தியை எடுத்தார். அறையில் தூங்கி கொண்டிருந்த மனைவி மகாலட்சுமி கழுத்தில் கத்தியால் குத்தினார்.

    இதில் ரத்தம் வெளியேறி மகாலட்சுமி அலறினார். சத்தம் கேட்டு எழுந்த 2-வது மகன் திரிஷ் அங்கு வந்தான். அப்போது அவன் மீதும் லேசாக கத்தி கீறியது. இந்த அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த மற்றொரு மகன் குணால் விளக்கை போட்டான்.

    அப்போது தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதையும், தந்தை கத்தியுடன் நிற்பதையும் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தான். உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து வெளியேறினார்.

    குணாலும், திரிஷ்சும் அக்கம்பக்கத்தினரை அழைத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே மனைவியை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய கிருஷ்ணமூர்த்தி கத்தியுடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×