search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார்- சபாநாயகரிடம் அன்பழகன் எம்எல்ஏ மனு
    X

    கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார்- சபாநாயகரிடம் அன்பழகன் எம்எல்ஏ மனு

    அரசு விழாவில் நடந்த மோதல் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அன்பழகன் எம்எல்ஏ மனு அளித்துள்ளார். #anbalaganmla #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று நடந்த அரசு விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.எ. அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது பேச்சை நிறுத்தும்படி கவர்னர் கிரண்பேடி கூறினார். அவர் தொடர்ந்து பேசியதால் மைக்கை துண்டிக்க உத்தரவிட்டார். இதனால் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்பழகன் எம்.எல்.ஏ. விழாவை புறக்கணித்து விட்டு வெளியேறினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இன்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நேற்றைய தினம் காந்தியின் பிறந்தநாளையொட்டி புதுவை அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக புதுவை மாநிலத்தை அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நானும் பங்கேற்றேன்.

    சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதலில் என்னை பேச அழைத்தனர். நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் இருந்து நான் பேசும் இடத்திற்கு வந்து நீங்கள் இதற்கு மேல் பேசக்கூடாது உங்கள் பேச்சை நிறுத்துங்கள் என்று தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவது போல் கூறினார்.

    அதற்கு நான் தயவு செய்து உங்கள் இருக்கையில் அமருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் கவர்னர் நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூறினேன்.

    அதற்குள் அங்கிருந்த மைக் இணைப்பாளரிடம் எனது மைக் இணைப்பை துண்டிக்க கவர்னர் உத்தரவிட்டார். அவரும் எனது மைக் இணைப்பை துண்டித்தார்.

    இதனால் நான் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது கவர்னர் தனது இருக்கையில் அமராமல் என்னை மேடையை விட்டு ‘யூ கோ ’என்று ஒருமையில் பேசி என்னை வெளியேறுமாறு சொன்னார். நான் என் பேச்சை நிறுத்திவிட்டு என் இருக்கையில் அமர சென்றபோது என்னை தனது இரண்டு கைகளாலும் அகல விரித்து என்னை மறித்து வெளியே போ எனக் கோபமாகக் கூறினார்.

    அப்போது நான் மக்கள் பிரதிநிதி என்னை வெளியில் போகச் சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேண்டுமானால் வெளியில் போங்கள் என கூறினேன் அதற்கு பிறகும் என்னை அவர் இருக்கையில் அமர விடாமல் தடுத்தார்.

    இதனை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இதற்கு மேலும் இங்கிருப்பது எனது மரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து மேடையிலிருந்து நான் வெளியேறி விட்டேன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்த விழாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணெதிரில் நடந்தது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை விழா மேடையில் பேச விடாமல் தடுத்ததோடு என்னை விழா மேடையில் இருந்து கவர்னர் என்ற அதிகாரத்தில் வெளியேற கூறியது எனது உரிமையை பறிக்கும் செயலாகும். கவர்னரின் இந்த நடவடிக்கை என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தும் செயலாகும். எனவே கவர்னர் மீது உரிமை மீறல் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    அவருடன் அ.தி.முக. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர் வையாபுரி மணிகண்டன் அசனா ஆகியோரும் சென்றனர். #anbalaganmla #kiranbedi

    Next Story
    ×