search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பெட்ரோல் விலை 87 ரூபாயை தாண்டியது
    X

    சென்னையில் பெட்ரோல் விலை 87 ரூபாயை தாண்டியது

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 5 காசுக்கு விற்பனையாகிறது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

    கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்து போனதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தேவை அதிகரிப்பதால் விலை உயர்வு கட்டுப்படுத்த இயலாதபடி உள்ளது.

    கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலராக இருந்தது. நேற்று ஒரு பேரல் 83 டாலராக உயர்ந்தது. இன்று அது 83.20 டாலராக நிர்ணயமாகி இருக்கிறது.

    இதன் காரணமாக பெட்ரோலியம் பொருட்களின் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 5 காசுக்கு விற்பனையானது.

    மும்பை நகரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.75 ஆக இருந்தது. இன்று அது 91 ரூபாயை எட்டியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் அதிக வாட் வரி விதிப்பு காரணமாக சில ஊர்களில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94 ஆக இருந்தது.

    டீசல் விலை இன்று 32 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சமீப நாட்களில் இன்றுதான் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 80 ரூபாயை நெருங்கி உள்ளது. சென்னையில் உள்ள பங்குகளில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் போன்று சமையல் கியாஸ் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.2.89 உயர்ந்துள்ளது. மானியம் இல்லாத கியாஸ் விலை ரூ.59 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சமையல் கியாசுக்கு வழங்கப்படும் மானியம் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ரூ.320.49 மானியம் வழங்கப்பட்டது. இந்த மாதம் (அக்டோபர்) கியாஸ் மானியம் ரூ.376.60 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #FuelPrice
    Next Story
    ×