search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
    X

    பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். #AnbumaniRamadoss
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே பாலாறு விழிப்புணர்வு கூட்டம் பா.ம.க. சார்பில் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுபேசியதாவது:-

    பாலாறு பகுதிகளில் மணல் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்ட வேண்டும்.

    ஆந்திரா, கர்நாடகம் போன்ற பக்கத்து மாநிலங்களில் 12 அடியாக இருந்த தடுப்பணைகளை 17 அடியாக உயர்த்தி உள்ளது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட விதிகளை மீறி கர்நாடகம் 14 ஏரிகளில் 17 தடுப்பணைகளை கட்டி உள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் தடுத்து நிறுத்தப்படுகிறது. நாம் மழைநீரை சேமிக்காமல் கடலில் விட்டு விடுகிறோம்.

    மழை நீரினால் மாவட்டத்தில் உள்ள 317 ஏரிகள் நிரம்பி வந்தது. தற்போது 124 ஏரிகள் அரைகுறையாக மழைநீர் முழு கொள்ளவை எட்டாமல் உள்ளது.

    பாலாற்றில் நீர் ஆதாரம் குறைந்துவிட்ட நிலையில் கிடைக்கின்ற நீரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.மேலும் மாற்று நீர் ஆதாரங்களையும் தேடுவது ஒன்றே தீர்வாகும்.

    தென்பெண்ணை, செய்யாறு, பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும்.

    காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பாலாறு விளங்குகிறது. பாலாற்றில் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நாம் அனைவரும் கை கோர்ப்போம். பாலாற்றை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலக பாமா, கிழக்கு மாவட்ட செயலாளர் ராம்குமார், என்.எஸ்.ஏகாம்பரம், இலந்தோப்புவாசு வக்கீல் சக்கரபாணி உள்பட கலந்து கொண்டனர்.

    முன்னதாக காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பழைய பாலாற்றை மீட்டுக் கொண்டுவர வேண்டும். பாலாற்று பிரசாரம் போல், தாமிரபரணி, காவிரி, வைகை, அத்திக்கடவு அவினாசி, அட்டப்பாடி திட்டம், கொள்ளிடம் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மைத் திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடுத்த 4 ஆண்டு காலத்தில் 20 நீர்த் திட்டங்களை செயல்படுத்த, சுமார் ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். அதன்மூலம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்து, தாமிரபரணி, அத்திக்கடவு அவினாசி, 58 கால்வாய்த் திட்டம், தோனிமடு திட்டம், நல்லாறு, பாண்டியாறு, தென்பெண்ணை, பாலாறு இணைப்புத் திட்டம், காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் உமாபதி, மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன், மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் நேற்று இரவு காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் பாலாற்றை பாதுகாப்பது தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். #AnbumaniRamadoss

    Next Story
    ×