search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் - 65 அடியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம்
    X

    58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் - 65 அடியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம்

    வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. #Southwestmonsoon #Vaigaidam

    கூடலூர்:

    தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் கைகொடுத்ததால் வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இருந்தபோதும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.

    இதன்பின் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 18 நாட்களுக்கு 1560 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    எனவே அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 4 அடி சரிந்து 65 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்தால் மட்டுமே 58-ம் கால்வாய் திட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியும். தற்போது நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளதால் கடந்த 20 நாட்களாக 58-ம் கால்வாய் திட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதனால் 58-ம் கால்வாய் மூலம் பயன் அடையும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 242 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4709 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1482 கன அடி. திறப்பு 4960 கன அடி. இருப்பு 4666 மி.கன அடி. ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக இன்று 2500 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடி. வரத்து 2 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.12 அடி. #Southwestmonsoon #Vaigaidam

    Next Story
    ×