search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை முன் எதிர்ப்பு முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்
    X

    தமிழிசை முன் எதிர்ப்பு முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து எதிர்ப்பு முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #Sophia
    தூத்துக்குடி:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அவரைப் பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.



    இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சோபியாவுக்கு ஜாமீன்கேட்டு தூத்துக்குடி மாவட்ட மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது சோபியாவுக்கு ஜாமீன் வழங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சோபியாவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #Sophia
    Next Story
    ×