search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அவதி
    X

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அவதி

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82-ஐ எட்டுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.75-ஐ நெருங்குகிறது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். #Petrol #Diesel
    சென்னை:

    தற்போது தங்கத்தைப் போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தின.

    இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.



    ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடு செய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

    அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது. அதேபோன்று டீசலும் லிட்டருக்கு விலை ரூ.72-ஐ கடந்தது.

    இந்த விலை உயர்வு பின்னர் சற்று தணிந்தது.

    ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

    கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.

    சென்னையில் பெட்ரோல் விலை தேதி வாரியாக வருமாறு:-

    ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.80.69, 25-ந் தேதி ரூ.80.70, 26-ந் தேதி ரூ.80.80, 27-ந் தேதி 80.94, 28-ந் தேதி ரூ.81.09, 29-ந் தேதி ரூ.81.22, 30-ந் தேதி ரூ.81.35, 31-ந் தேதி ரூ.81.58, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.81.77 2-ந் தேதி ரூ.81.92

    10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 உயர்ந்து உள்ளது.

    சென்னையில் கடந்த 10 நாட்களாக டீசல் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வந்து உள்ளது. இதன் நிலவரம் வருமாறு:-

    ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.73.08, 25-ந் தேதி ரூ.73.09, 26-ந் தேதி ரூ.73.23, 27-ந் தேதி 73.38, 28-ந் தேதி ரூ.73.54, 29-ந் தேதி ரூ.73.69, 30-ந் தேதி ரூ.73.88, 31-ந் தேதி ரூ.74.18, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.74.42, 2-ந் தேதி ரூ.74.77.

    10 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.69 அதிகரித்து உள்ளது.

    பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், இந்த விலை உயர்வு அவற்றுடன் நின்று விடுவது இல்லை. சங்கிலித்தொடர்போல இவற்றின் விலை உயர்வு பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது.

    டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்கள், காய்கனிகள் விலை உயர்கிறது. இவற்றின் விலை உயர்கிறபோது ஓட்டல் உணவுப்பண்டங்களின் விலையை ஓட்டல் உரிமையாளர்கள் உயர்த்தி விடுகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் ஒருமுறை உயர்ந்தால் அது அப்படியே நிலைத்து விடுகிறது. திரும்ப அத்தியாவசியப்பொருட்கள், காய்கறிகள் விலை குறைகிறபோது பெரும்பாலான ஓட்டல்கள் விலை குறைப்பு செய்வது இல்லை.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம், கால்டாக்சி கட்டணம் உயர்ந்து விடுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட சிரமங்களை சந்திக்கிறார்கள்.

    இதனால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிற சாமானிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48, டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 உற்பத்தி வரியாக மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. இதே போன்று தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது.

    தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.  #Petrol #Diesel
    Next Story
    ×