search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்மார்ட்டை தடை செய்யக்கோரி நாடு தழுவிய போராட்டம் - விக்கிரமராஜா
    X

    வால்மார்ட்டை தடை செய்யக்கோரி நாடு தழுவிய போராட்டம் - விக்கிரமராஜா

    சில்லரை வணிகத்தை பாதிக்கும் வால்மார்ட்டை தடை செய்யக்கோரி செப்டம்பர் 28-ந்தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். #Walmart
    கரூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில்லரை வணிகத்தை பாதிக்கும் வால்மார்ட்டை தடை செய்யக்கோரி செப்டம்பர் 28-ந்தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டம் தொடர்பாக வருகிற 4-ந்தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வால்மார்ட்டை விட்டு விட்டால் 2 வருடத்தில் சில்லரை வர்த்தகமே இல்லாத நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்போதே பல மாவட்டங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து கடைகளுக்குள் புகுந்து சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக நாளை மறுநாள் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் வால்மார்ட்டுக்கு தடை விதித்ததோடு, அந்நிறுவனத்தின் கட்டிடத்திற்கு சீல் வைத்தார். அது போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி.யினால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு, அதன்பின்னர் வந்த ஜி.எஸ்.டி.யால் 40 சதவீத வியாபாரம் சரிந்துள்ளது. வரியை குறைத்தால்தான் வரி ஏய்ப்பு குறையும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்ததில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் துணி, பேப்பர் பைகள் ஆகியவற்றிற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×