search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப் பாடிய போது எடுத்த படம்.
    X
    டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப் பாடிய போது எடுத்த படம்.

    கேரள வெள்ள நிவாரண நிதி திரட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட டெல்லியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. #KeralaFloodRelief
    புதுடெல்லி:

    கேரளா மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு வர பல்வேறு மாநிலங்களும் நிவாரண நிதி வழங்கி வருகிறது.

    இது தவிர தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்களும் நாடு முழுவதும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்களும், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று கேரள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

    இதில் பிரபல பாலிவுட் பாடகர் மொகித் சவுகான் பங்கேற்று பாடினார். இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம். ஜோசப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி தொடங்கியதும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் மேடைக்கு சென்று கேரள வெள்ள சேதம் பற்றிய பாடலை உருக்கமாக பாடினார்.

    கேரளம் விரைவில் மீண்டெழும், இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து நம்பிக்கையுடன் கூறுகிறேன். ஒரு நாள் நாங்கள் மீண்டெழுவோம் என்ற கருத்துள்ள பாடலை சத்தமாக பாடினார்.

    நீதிபதி குரியன் ஜோசப், இந்த பாடலை பாடியபோது அரங்கத்தில் இருந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட அனைவரும் தன்னுடன் சேர்ந்து பாடும்பாடி கேட்டுக்கொண்டார்.

    அதன்படி, அனைவரும் கேரளம் மீண்டெழும், அந்த நாள் விரைவில் வரும் என்று சேர்ந்து பாடினர்.

    கே.எம். ஜோசப் பாடியபோது எடுத்த படம்

    சுப்ரீம் கோர்ட்டுக்கு சமீபத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.எம். ஜோசப் அடுத்த பாடலை பாட வந்தார். அவர், கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய மலையாள படமான அமரம் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

    அது மீனவர்களின் துணிவையும், அவர்களின் சேவையையும் பாராட்டும் வகையில் இருந்தது. பாடலை பாடிய பின்பு நீதிபதி கே.எம். ஜோசப் கூறியதாவது:-

    கேரள மக்களை மழை வெள்ளம் சூழ்ந்தபோது யாரும் சொல்லாமலேயே மீனவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். அவர்களின் படகுகளையும், வள்ளங்களையும், கட்டுமரங்களையும் எடுத்து வந்து எண்ணற்ற மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர். அவர்களின் சேவை மனப்பான்மைக்கு இதயம் நிறைந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இந்த இசை நிகழ்ச்சி மூலம் கேரள வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிதி திரண்டது. இதுபற்றி நீதிபதி குரியன் ஜோசப் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சார்பில் ஏற்கனவே இரண்டு முறை வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 3-வது முறையாக சேகரிக்கப்பட்ட பொருட்கள் அடுத்து அனுப்பப்பட உள்ளது என்றார்.

    இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எம். ஜோசப் கூறும்போது, சில நாட்களுக்கு முன்பு குரியன் ஜோசப் என்னை தொடர்பு கொண்டு நிவாரண நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதையும், இதில் நான் பங்கேற்று பாட வேண்டும் என்றும் கூறினார். நான் எப்படி பாடுவேன். வாழ்க்கையில் இதுவரை பாடியதே இல்லையே என்று கூறினேன். அதற்கு அவர், உன் பாடல் தென் இந்தியாவிற்கு சென்றால் நாம் முன் ஜாமீன் எடுத்துக் கொள்ளலாம் என்று வேடிக்கையாக கூறினார்.

    ஆனால் இசை நிகழ்ச்சியில் கே.எம். ஜோசப் பாடியதும் அரங்கமே அவருக்கு பாராட்டு தெரிவித்தது. #KeralaFloodRelief

    Next Story
    ×