search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரேற்றும் நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ள காட்சி.
    X
    நீரேற்றும் நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ள காட்சி.

    எடப்பாடி அருகே நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

    எடப்பாடி அருகே நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் குடிநீர் விநியோகம் பாதிப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறி பாய்ந்து ஓடுகிறது.

    தொடர் வெள்ளப் பெருக்கால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பெரியார் நகரில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மின்மாற்றி சாய்ந்தது. நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று இந்திரா நகரில் கழிவுநீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்தது. நகராட்சி சார்பில் டேங்கர் லாரி மூலம் கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.

    அனல்மின் நிலையம் அருகே காவிரி நீர், அதன் குறுக்கே செல்லும் மின்வயர்களை தொட்டப்படி சென்றது. அப்பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாயும் நிலையில் இருந்ததால், கயிறுகள் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேட்டூர்-எடப்பாடி செல்லும் சாலையில் அனல்மின் நிலையம் அருகே தார் சாலையை தண்ணீர் மூழ்கடித்துள்ளதால், வாகன போக்குவரத்து தடை 5-வது நாளாக நீடிக்கிறது.வாகனங்கள் சென்று விடாமல் இருக்க அங்கு சாலையின் குறுக்கே போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அனல் மின் நிலைய வளாகத்தின் வழியாக ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

    கரையோர வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் கேம்ப், இந்திரா நகரில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற மறுத்தததால் அப்பகுதியில் உள்ள 15 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அண்ணா நகர் கரையோர வீடுகளில் இருந்து வெளியேறிய 12 பேர் அப்பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு வருவாய்த் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் காட்டூர் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அங்கிருந்து எடப்பாடி, கொங்காணபுரம், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நீரேற்று நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இங்குள்ள நீரை உறிஞ்சி எடுக்கும் கனரக எந்திரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் செயல்படாமல் உள்ளது. குடிநீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நீரேற்று நிலையம் மூடப்பட்டது.

    இதன் காரணமாக எடப்பாடி, கொங்காணபுரம், மகுடஞ் சாவடி, ஆட்டையாம் பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளத்தை வெளியேற்றிடவும், சுத்திகரிப்பு எந்திரங்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக செயல்படாததால் இன்னும் சில நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்றும், விரைவில் எந்திரங்கள் சீர் செய்யப்பட்டதும் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூலாம்பட்டி, நெடுங்குளம், காட்டூர், நாவிதன்குட்டை, கொட்டாயூர் உள்ளிட்ட பகுதி கரையோரமுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் கரும்பு, வாழை உள்பட 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. நெடுங்குளம், காட்டூர் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    நாவிதன்குட்டையில் ஆற்றோரமிருந்த தார் சாலை மூழ்கியது. இதனால் அந்த வழியே செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.

    Next Story
    ×