search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிய 27 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்
    X

    ஊட்டியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிய 27 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டு இருந்த 27 தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. #elephant

    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. யானைகளின் வழித் தடங்களான மசின குடி, மாயார், மாவல்லா, வாழைத் தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித் தடத்தை மறித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை தொடர்ந்து யானைகள் வழித் தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு ஜூலை 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித் தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

    அதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித் தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.

    இவர்கள் அளிக்கும் ஆவணங்களில் தகவல்கள் முழுமையாக இல்லாமல் இருந்தாலோ, அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததாக தெரிய வந்தாலோ, அந்த ரிசார்ட்டுகளையும் உடனடியாக மாவட்ட கலெக்டர் மூடி சீல் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்டுகளுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. நாளை முதல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முடுக்கி விட்டுள்ளார்.

    குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டேரி பகுதியில் தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த கட்டிடத்தை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, நகர வடிவமைப்பு அலுவலர் மதியழகன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    அப்போது நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்படுவது உறுதியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் கட்டிட பணியை நிறுத்தி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

    Next Story
    ×