search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே வீடு புகுந்து கத்தி முனையில் தாய் - மகளை மிரட்டி நகை பறிப்பு
    X

    கோவை அருகே வீடு புகுந்து கத்தி முனையில் தாய் - மகளை மிரட்டி நகை பறிப்பு

    கோவை அருகே தாய், மகளை கத்தி முனையில் மிரட்டி நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கருமத்தம் பட்டி பிருந்தாவன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் முரளி. கருமத்தம் பட்டியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிரியலதா (36). நேற்று இரவு 9 மணியளவில் முரளி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் பிரியலதா அவரது மகள் ராகவி, பிரியலதா தாய் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்தனர். மேலும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அக்கும்பல் பிரியலதா மற்றும் அவரது மகள் ராகவியை கத்தி முனையில் மிரட்டி நகையை தருமாறு கேட்டனர்.

    இதற்கு பிரியலதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பிரியலதா, அவரது மகள் ராகவி ஆகியோரை மிரட்டி நகையை பறித்தது.

    பிரியலதாவிடம் மூன்றரை பவுன் நகையும், ராகவி அணிந்திருந்த 2 பவுன் செயின்,கம்மல், மோதிரம் உள்ளிட்ட வைகையும் பறித்தது. தாய்- மகளிடம் இருந்து ஏழரை பவுன் நகையை பறித்து கொண்டு அக்கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடி நின்றது.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். சூலூர் பகுதியில் தொடர் கொள்ளை, நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் கொள்ளையர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கைவரிசை காட்டி உள்ளனர்.

    எனவே கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×