search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரூர் பெரியகுளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.
    X
    பேரூர் பெரியகுளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.

    கோவை, திருப்பூர், நீலகிரியில் பலத்த மழையால் 20 அணைகள் நிரம்பி வழிகிறது

    கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 20 முக்கிய அணைகளில் நிரம்பி வழிகிறது. #SouthWestMonsoon
    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அதையொட்டி உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக முக்கிய அணைகளான சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் பெரும்பாலான ஏரிகள், குளங்களும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 3 மாவட்டங்களிலும் உள்ள 20 முக்கிய அணைகளில் நிரம்பி வழிகிறது.

    கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் மொத்த உயரம் 50 அடி ஆகும். கடந்த மாத தொடக்கத்தில் நீர் மட்டம் 25 அடிக்கும் குறைவாக இருந்தது.

    பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த வாரம் அணை நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே உள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக மதகுகள் வழியாக சிறுவாணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயரம் 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி 97 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கிவைக்க முடியும். அதன்படி கடந்த 2 வாரத்துக்கு முன்பே பில்லூர் அணையும் நிரம்பியது. உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. அணை நிரம்பு இன்னும் 19 அடி தண்ணீர் தேவை.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 குளங்கள் உள்ளன. இதில் கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர் ஆகிய குளங்கள் கோடை மழையிலேயே நிரம்பி இருந்தன. பருவமழை காரணமாக உக்குளம், புதுக்குளம் கோளராம்பதி, குமார சாமி குளம், உக்கடம் பெரிய குளம், குனியமுத்தூர் செங்குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உள்பட 13 குளங்கள் நிரம்பி விட்டன.

    தண்ணீர் நிரம்பிய குளங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. சொட்டையாண்டி குட்டை, நரசாம்பதி குளம், கங்கநாராயண சமுத்திர குளம், பேரூர் பெரியகுளம் உள்பட மீதமுள்ள குளங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த குளங்களுக்கு நீர்வரத்து உள்ளது. எனவே இந்த குளங்களும் விரைவில் நிரம்பும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல சித்திரைச்சாவடி, புட்டுவிக்கி, சுண்ணாம்புக் காளவாய், நண்டங்கரை, முண்டந்துறை ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது.

    சோலையார் அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வால்பாறை சோலையார் கடந்த 2 வாரத்தில் 2 முறை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடியாகும். இந்த அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென் மேற்குபருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.  #SouthWestMonsoon


    Next Story
    ×