search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன‌
    X

    நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன‌

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள‌தை தொடர்ந்து நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. ஆடி மாதம் தொடங்கவுள்ள நிலையில் காற்று வேகமாக வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த சூறைக்காற்று மாலையிலும் நீடித்தது.

    சாலையோர மணலை காற்று அள்ளி வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் மாற்றியில் மரக்கிளைகள் உரசியதால் தீப்பொறிகள் கிளம்பின. அங்குள்ள மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பல இடங்களில் சாலையோர விளம்பர பலகைகள் விழுந்தன.

    மின் வயர்கள் அறுந்ததால் நெல்லை மாநகரில் அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்டது. சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியிலும் நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் தென்னை, வாழை, எலுமிச்சை மரங்கள் சேதமடைந்தன. மகசூல் தரும் நிலையில் இருந்த எலுமிச்சை மரங்களில் இருந்து பழங்கள் உதிர்ந்து சேதமானது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்ப‌ட்டது.


    சிவகிரியில் 3 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இரவில் வெகுநேரம் வரை அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட‌து. வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்சின் மேற்கூரை பெயர்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து இறங்கினார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

    வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ அலுவலக காம்பவுண்டு சுவரில் மின்கம்பம் சாய்ந்து சுவர் சேதமானது. சுப்பிரமணியபுரம் கல்லூரி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இதேபோல கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மந்தியூர், மாதாபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்தன. இப்பகுதியிலும் எலுமிச்சை பழங்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்த‌னர்.

    கடையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது. இதனால் அருகில் நின்ற கார் சேதமானது. அப்பகுதி வழியே சென்ற பாண்டியன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. ஜே.சி.பி.எந்திரம் மூலம் அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. சில இடங்களில் வீடுகளின் மேல் இருந்த குடிநீர் தொட்டிகளும் சேதமாயின.

    Next Story
    ×