search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறையாறு தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகம் - கலெக்டர் திறந்து வைத்தார்
    X

    பொறையாறு தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகம் - கலெக்டர் திறந்து வைத்தார்

    நாகை மாவட்டம், பொறையாறில் அமைந்துள்ள தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.

    பொறையாறு:

    நாகை மாவட்டம் பொறையாறில் அமைந்துள்ளது தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி. கடந்த 1882-ம் ஆண்டு இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. 1956-ம் ஆண்டு இந்த பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. 1978-ம் ஆண்டு இந்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    தற்போது இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் 775 பேர் படித்து வருகிறார்கள். 44 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 136-வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் மத்திய- மாநில அரசின் பல்வேறு உயர் பதவிகளிலும், வெளிநாடுகளில் பல்வேறு உயர் பதவிகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகள் நலன் கருதி ரூ.30 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்களை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன்ஆதித்தன் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த சுகாதார வளாக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு புதிய சுகாதார வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமாருக்கு பள்ளியின் நிறுவனரான தவசுமுத்து நாடாரின் முதல் மகன் ரத்தினசாமி நாடாரின் கொள்ளுப்பேரன் முத்துசாமி நாடார் சால்வை அணிவித்தார். 2-வது மகன் வெள்ளைத்தம்பி நாடாரின் கொள்ளுப்பேரன் தவசுமுத்து நாடார் மாலை அணிவித்தார். 3-வது மகன் குருசாமி நாடார் பேரன் தங்கமணி நாடார் மலர்க்கொத்து வழங்கினார். மற்றொரு பேரன் ஜெயக்குமார் நாடார் நினைவு பரிசு வழங்கினார்.

    இந்த விழாவில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நிறுவனர் தவசுமுத்து நாடார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன்ஆதித்தனின் இளையமகன் பா.ஆதவன் ஆதித்தன், சகோதரி அனிதாகுமரன் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கே.சிவக்குமார் மற்றும் தவசுமுத்து நாடாரின் குடும்பத்தினர் வரவேற்றனர். முன்னதாக மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. #tamilnews

    Next Story
    ×