search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரே போனாலும் ஒருபிடி மண் எடுக்க விடமாட்டோம் - விவசாயிகள் கொந்தளிப்பு
    X

    உயிரே போனாலும் ஒருபிடி மண் எடுக்க விடமாட்டோம் - விவசாயிகள் கொந்தளிப்பு

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்காக உயிரே போனாலும் ஒருபிடி மண் எடுக்க விடமாட்டோம் என்று திருவண்ணாமலை விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர். #GreenWayRoad

    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், காடுகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்தால் பசுமையாக காட்சி அளிக்கும் விவசாய நிலங்கள் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது தெரியவில்லை.

    திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களும் அடிப்படையாகவே விவசாயத்தை சார்ந்தவை. பாக்கு மரங்கள், குலை குலையாய் காய் வைத்திருக்கும் தென்னை மரங்கள் என எங்கு பார்த்தாலும் 5 மாவட்டங்களும் பசுமையாகவே காட்சியளிக்கின்றன.அந்த பசுமையெல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு தான்.

    இந்த பசுமையை அழித்து தான் பசுமை சாலை போடப்படுகிறது. விவசாயிகள் நிலத்தில் செருப்பு அணிந்து நடக்க மாட்டார்கள். சோறு போடற தெய்வம் என்பார்கள். சேலம் மக்களின் கொந்தளிப்பே, 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அடித்தளம்.

    விவசாயிகளின் கோபமும், விரக்தியும் தான் விவசாய நிலங்களில் கற்களை நடவரும் அதிகாரிகளை எதிர்க்க வைக்கிறது. திட்டத்திற்கு எதிராக பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர்கள் பியூஸ் மனுஸ், வளர்மதி மற்றும் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

     


    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளை போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் விவசாயிகளை விரட்டியடித்து முடித்து விட்டனர்.

    திருவண்ணாமலை தாலுகாவில் காந்திபுரம், நார்த்தாம்பூண்டி, மேப்பத்துறை, முத்தரம்பூண்டி, தென்னகரம், நெல்லிமேடு ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு பணி நடந்தது. மேப்பத்துறை கிராமத்தில் 2 ஏக்கர் நிலம், வீடு பறிபோவதால் லட்சுமி என்ற மூதாட்டி மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

    சிறுகிளாம்பாடி கிராமத்தை சேர்ந்த ஒருசில விவசாயிகள் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கு முயன்றனர். தென்னகரத்தில் உள்ள விவசாய நிலங்களில் கறுப்பு கொடி ஏற்றி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    அங்கு நடந்த நில அளவீடு பணியை தடுக்க 2 பெண்கள் பெட்ரோல் கேனுடன் வந்து ‘தீக்குளித்து சாவோம்’ என தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறுகிளாம்பாடி மற்றும் தென்னகரத்தில் நிலம் அளவீடும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    செய்யாறு அடுத்த தேத்துறை, நெடுங்கல், இளநீர் குன்றம், கீழ்கொளத்தூர் கிராமங்களில் நிலம் எடுக்க அதிகாரிகள் முகாமிட்டனர். அப்போது, தேத்துறையில் 8 வழி பசுமை சாலை திட்டத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாது என வேண்டி கொண்டு அதிகாரிகள் பூமி பூஜை செய்தனர்.

    பூமிபூஜையை வெற்றிகரமாக முடித்தவுடன் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை தொடர்ந்தனர். பசுமை சாலைக்காக தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி இடமும் கையகப்படுத்தப்பட்டது. பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானமும் பறிபோகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று மாதாந்திர தேர்வு எழுதி கொண்டிருந்தனர். மாணவர்களை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்து மாணவர்களுக்கு நடுவில் கற்களை நட்டனர். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தேத்துறை கிராமத்தில் விவசாயி பெருமாள் என்பவரின் மனைவி அஞ்சலை தனது நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் புரண்டு கதறி அழுதார்.

     


    செய்யாறு அருகே உள்ள நெடுங்கல் கிராமத்தில் பசுமை சாலை அமையும் இடத்திற்கு அருகே உள்ள புறம்போக்கு நிலங்களை 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளனர். பசுமை வழி சாலை அமைந்தால், சாலையோர நிலம் மதிப்புமிக்கதாக மாறும்.

    அப்போது, அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் இரவோடு, இரவாக குடிசைகள் அமைத்திருப்பது தெரியவந்தது. எனவே, திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மொத்தத்தில், பசுமை சாலைக்காக ஒருபிடி மண் எடுக்க விட மாட்டோம் என விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்து பசுமை சாலையை அமைக்க தீவிரம் காட்டுகின்றனர்.

    விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்த மறுக்கின்றனர். ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவித்தனர். பசுமை சாலை அமைத்தே தீருவோம் என மத்திய-மாநில அரசுகள் அடம்பிடிக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் ஆட்சேபனை தெரிவித்தும் பயனில்லை.

    போலீசை வைத்து அடக்குமுறையோடு எதேட்சை அதிகாரத்துடன் ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை. பாடுபட்டு பண்படுத்தி உழுத எங்கள் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம் என்று ஆவேசமாக கூறினர். #GreenWayRoad

    Next Story
    ×