search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளை அனுமதிக்க மாட்டோம்: ராமதாஸ் பேச்சு
    X

    சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளை அனுமதிக்க மாட்டோம்: ராமதாஸ் பேச்சு

    சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று குறிஞ்சிப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசினார். #ramadoss

    குறிஞ்சிப்பாடி:

    தமிழக அரசை அகற்றக்கோரி கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 17 பேர் முதல்-அமைச்சராக இருந்துள்ளார்கள். இதில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஊழல் செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் மத்திய அரசுக்கு எப்போதாவது வளைந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய ஆட்சி அப்படி இல்லை. மிகவும் மோசமான ஆட்சி.

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு பணிகளை ஒதுக்கி கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. ஆளும் கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இந்த ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் மனம் மாற வேண்டும்.

    என்னை பற்றி பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து இருக்கிறார். அவருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் பற்றி தெரியாது. இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று அவருக்கு தெரியாது. பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டத்தின் போது 100 மரங்களை பொதுமக்களே வெட்டினார்கள்.

    குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அங்குள்ள சமுதாய மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடி இருக்கிறார்கள். அப்போது அவர்கள் பஸ்களை உடைத்து இருக்கிறார்கள். அரசு பொது சொத்துக்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெரியாதா? இனி அவரை பற்றி பேச வேண்டாம்.

    நடிகர்கள் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சர்கார் என்ற படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

    இதே பழைய ராமதாசாக இருந்தால் அந்த படத்தை ஒரு சினிமா தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். அந்த காட்சியில் நடித்ததற்காக நடிகரும், தயாரிப்பாளரும் சிகரெட் கம்பெனியிடம் காசு வாங்கி இருப்பார்கள், அதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    8 வழி பசுமை சாலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டை-சேலம் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இந்த அரசு ஒருநிமிடம் கூட ஆட்சி செய்ய தகுதி இல்லாத அரசு. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு போராடினேன். அப்போதே ஆலையை மூடி இருக்கலாம். இப்போது துப்பாக்கி சூடு நடந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

    அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ramadoss

    Next Story
    ×