search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
    X
    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை - பவானிசாகர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது

    மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் நீண்ட நாளுக்குப் பிறகு பவானிசாகர் அணைக்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் நீலகிரி மலை பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை முதல் அது மேலும் பல மடங்கு உயர்ந்து அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 186 கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர் மட்டம் நேற்று 57.46 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 62 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைக்கு தண்ணீர் வரும் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    தொடர்ந்து வரும் வெள்ளப் பெருக்கால் மாயாற்றில் வனப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வேண்டாம், துணி துவைக்கவும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வன அதிகாரிகளும், பொதுப்பணி துறையினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



    Next Story
    ×