search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்- நெடுவாசல் போராட்டக்குழு அறிவிப்பு
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்- நெடுவாசல் போராட்டக்குழு அறிவிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது. #neduvasalprotest #Hydrocarbonproject

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழுவின் சார்பில் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு மெய்யநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படமாட்டாது என்றும், எரிபொருள் பரிசோதனைக்காக ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    இதையும் மீறி 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கும், நிலத்தை திருப்பி கொடுக்காததற்கும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

    இத்தகைய நிலையை தெரிவிப்பதோடு, நெடுவாசல் திட்டத்தை கைவிடுவதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனமே விருப்பம் தெரிவித்துள்ளதால், மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை 14-ந்தேதி கலெக்டரை சந்திக்க உள்ளோம்.

    அதன்பிறகு இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தையும் சந்திக்க உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 100 கிராம மக்களை திரட்டி மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #neduvasalprotest #Hydrocarbonproject

    Next Story
    ×