search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்- 12 பேர் மயக்கம்
    X

    ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்- 12 பேர் மயக்கம்

    சமவேலை, சம ஊதியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர்.#Teachers #Protest #RajarathinamStadium
    சென்னை:

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று தொடங்கியது.

    ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். சமவேலை, சம ஊதியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

    தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்-ஆசிரியைகள் திரண்டு வந்ததால் அவர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்தனர்.

    நேற்று காலை முதல் மதியம் வரை அவர்கள் கைது செய்யப்பட்டு ஸ்டேடியத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் அங்கு உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இரவு வரை நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை பார்த்து போலீசார் என்ன செய்வது என்று திகைத்தனர்.

    ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டதால் போராட்டம் தீவிரம் அடைந்தது. கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்வோம் என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனாலும் ஆசிரியர்கள் யாரும் கலைந்து போகவில்லை.

    இரவு நேரத்தில் பெண்கள் எப்படி வெளியூர் புறப்பட்டு செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியதால் போலீசாரால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. விடிய விடிய ஆசிரியர்கள், ஆசிரியைகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. போராட்டத்தில் மேலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சுமார் 5 ஆயிரம் பேர் இன்று குவிந்ததால் போலீசாரால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



    மேலும் நேற்று காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் பெரும்பாலான ஆசிரியர்-ஆசிரியைகள் சோர்வடைந்தனர். இன்று காலையில் சிலர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 9 ஆசிரியைகள் உள்பட 12 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. ஆரோக்கிய சீலி

    2. முனியன்

    3. செல்வி

    4. மலர்

    5. சிவகாமி சுந்தரி

    6. தனலட்சுமி

    7. பிரபாவதி

    8. சந்திரா

    9. மணி

    10. தினகரன்

    11. ராஜகுமாரி

    12. ரேகா.

    ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.#tamilnews
    Next Story
    ×