search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியாக அதிகரிப்பு
    X

    சேலத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியாக அதிகரிப்பு

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று 103.1 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக திருச்சி, திருவள்ளூர், கரூர் மாவட்டங்களில் நேற்று அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. நாமக்கல், சேலம், வேலூரில் 103 டிகிரியும், தருமபுரி, மதுரையில் 102 டிகிரியும் வெயிலின் தாக்கம் இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி 102.2 டிகிரியாக இருந்த வெயில் 20-ந் தேதி 101.7, 21-ந் தேதி 98.6, 22-ந் தேதி 102.6 டிகிரியாகவும், நேற்று 103.1 டிகிரியாகவும் அதிகரித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி 100 டிகிரியும், 20-ந் தேதி 98.6 , 21-ந் தேதி 102.2, 22-ந் தேதி 100.4 டிகிரியும் வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று அங்கும் உச்ச கட்டமாக 103.1 டிகிரி வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று 103.1 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    சாலைகளில் சென்றவர்கள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் மரங்களை தேடி நிழலில் ஓதுங்கினர். வீடுகளில் பகலில் புழுக்கத்தில் தவித்த மக்கள் இரவிலும் வியர்த்து வடிந்ததால் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தனர்.

    மின் விசிறிகளை முழு வேகத்தில் இயக்கினாலும் அனல் காற்றாக வீசியது. இதனால் பெரும்பாலான வீட்டில் உள்ள மரத்தின் அடியில் கட்டில்களை போட்டு தூங்கினர்.

    தற்போதே வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டி உள்ளதால் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சேலத்தில் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், நுங்கு, தர்பூசணிகளை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இதே போல கம்மங்கூழ் கடைகள் மற்றும் செயற்கை குளிர்பான கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    சிறிய இளநீர் 30 ரூபாய் வரையும், அதிகபட்சமாக பொள்ளாச்சி இளநீர் 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 3 கண்கள் கொண்ட ஒரு நுங்கு 10 ரூபாய்க்கும், தர்பூசணி ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் இயற்கை குளிர்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள்.
    Next Story
    ×