search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ள பஸ்.
    X
    சுற்றுலா பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ள பஸ்.

    ஊட்டியில் ரூ.100 கட்டணத்தில் சுற்றுலா இடங்களை பார்வையிட அரசு பஸ்கள் இயக்கம்

    ஊட்டியில் ரூ.100 கட்டணத்தில் சுற்றுலா இடங்களை பார்வையிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி சுற்று பேருந்துகளின் இயக்கம் இன்று முதல் தொடங்கியது.
    காந்தல்:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு தினமும் ஏராளமான வெளிநாடு, வெளிமாநில, மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக விடுமுறை நாட்களிலும், சீசன் சமயத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கார், வேன், பஸ்களில் சுற்றுலா வருபவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் ஒரே நாளில் பார்வையிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அரசு பஸ்களில் வருபவர்கள் ஒருநாளைக்கு ஒரு சில இடங்களை மட்டுமே பார்த்து செல்கிறார்கள்.

    இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி சுற்று பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்பட்டு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் இறக்கி விடப்படுவார்கள்.

    இதற்காக ஒரு பயணிக்கு ரூ. 100 வசூல் செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இந்த இடங்களை சுற்றி பார்த்து விட்டு அடுத்த பஸ்சில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் வந்து விடலாம். திரும்பி வரும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. சுற்றுலா பயணிகள் தாங்கள் முதலில் சென்ற பஸ் டிக்கெட்டை காண்பித்தால் மட்டும் போதும்.

    சனி, ஞாயிறு மற்றும் கூட்ட நெரிசல் உள்ள நாட்களில் மட்டும் தற்போது இந்த பஸ் சேவை இருக்கும். அடுத்த மாதம் முதல் இந்த பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும் என தெரிகிறது.

    சுற்று பேருந்து சேவை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


    Next Story
    ×