search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ் முயற்சி - நாராயணசாமி
    X

    மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ் முயற்சி - நாராயணசாமி

    மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் நிர்வாகிகளை சந்தித்த புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன், டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் இன்று அதிகாலை புதுவை திரும்பினர்.

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி 16-ந்தேதி உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் விவகாரத்தில் தீர்ப்பளித்தது.

    இதில் மத்திய அரசு 6 வாரத்திற்குள் காவிரி மேம்பாட்டு வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க உத்தரவிட்டது. இதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரை காவிரி மேம்பாட்டு வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. புதுவையில் காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அழுத்தங்களை கொடுத்தோம்.

    புதுவைக்கு வந்த பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். முதல் -அமைச்சர் என்ற முறையில் பிரதமருக்கு 2 முறை கடிதம் அனுப்பினேன். ஆனால் இதற்கெல்லாம் எந்த பதிலும் இல்லை.

    இதற்கிடையில் காவிரி வாரியம் அமைக்கவிட்டால் சட்ட ஆலோசர்களுடன் கலந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தயங்கமாட்டேன் என கூறியிருந்தேன். சமீபத்தில் புதுவை நீர்வளத்துறை செயலர் அன்பரசு அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலர், இணை செயலர் ஆகியோரை சந்தித்து வாரியம் அமைக்க வலியுறுத்தினார். டெல்லிக்கு சென்றபோது வழக்கு நடத்திய வக்கீல்களை சந்தித்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்தேன்.

    இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும். தீர்ப்பில் வழக்கு தொடர்பாக மேல் முறையீடோ அல்லது வேறு கோர்ட்டுக்கோ செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே சட்டரீதியாக மத்திய அரசு மீது நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் பதிலும் வருமாறு:-

    கேள்வி:- மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதே?

    நாராயணசாமி:- மத்திய அரசு மீது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அதன்பின் சந்திரபாபுநாயுடு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

    ஆனால் கடந்த 17 நாட்களாக சட்டமன்றத்தை அ.தி.மு.க முடக்கி வருகின்றனர். 50 எம்.பி.க்கள் இணைந்து தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஏற்க வேண்டும் என்பது விதி. இதில் விரைவில் முடிவு தெரியும்.

    கேள்வி:- நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து கட்சி தலைமையிடம் பேசினீர்களா?

    பதில்:- நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களை சந்தித்து பேசினோம். நேற்றைய தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினோம். அப்போது புதுவையில் உள்ள அரசியல் நிலவரம், நேரடியான எம்.எல்.ஏ.க்கள் நியமனம் குறித்து தெரிவித்தோம். கட்சி தலைமையின் கருத்தின்படி நடப்போம்.

    கேள்வி:- காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறதா?

    பதில்:- காவிரி பிரச்சினை மாநிலத்தின் உரிமை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டியது மாநில அரசின் கடமை.

    ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படுவதே இல்லை. சட்டமன்றத்தில் 5 நிமிடம் இருப்பது, பொத்தாம் பொதுவாக பேசுவது என்ற வகையில்தான் செயல்படுகின்றனர்.

    ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக என்.ஆர். காங்கிரஸ் செயல்பட வில்லை. குறுக்குவழியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க பகல்கனவு காண்கின்றனர். அவர்களின் ஜம்பம் பலிக்காது. மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களோடு அவர்கள் பேசுவதாக தகவல் வருகிறது. இதன்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும்.

    புதுவை சட்டமன்றத்தில் எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து தீர்மானத்தை நிறை வேற்றினோம். புதுவை மக்கள் மீதும், காவிரி விவசாயிகள் மீதும் என்.ஆர்.காங்கிரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

    பதவி வேண்டும், நாற்காலி வேண்டும். அதைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை. எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்சினைகளுக்கு அவர்கள் குரல் கொடுப்பதும் இல்லை.

    கேள்வி:- தமிழகத்தில் காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- இதுதொடர்பாக கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம்.

    கேள்வி:- புதுவை அரசு முடக்க சதி நடப்பதாக கூறப்படுகிறதே?

    பதில்:- இந்த செய்திக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. பாராளுமன்றம்கூட சில நாட்களாக நடைபெறவில்லை. அதற்காக எமர்ஜென்சி கொண்டு வரலாமா? புதுவை சபாநாயகர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும்.

    அந்த உத்தரவுக்கு எதிராக கோர்ட்டிற்கு சென்றவர்கள் சபாநாயகரை ஒரு மனு தாரராக ஏற்கவில்லை. சபாநாயகரை வாதியாக சேர்க்காமல் கோர்ட்டு அளிக்கும் உத்தரவு அவரை எப்படி கட்டுபடுத்தும்?

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #tamilnews

    Next Story
    ×