search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கருங்குளம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
    X

    சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கருங்குளம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

    சேர்வலாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மட்டும் எதிர்பாராமல் பெய்த மழையால் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாய நெற்பயிர்கள் சேதம் அடைந்தது.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் தாமிரபரணி நதியில் இருந்து மருதூர் அணைக்கட்டு மூலமாக பிசான பருவம் நடந்து முடிந்துள்ளது. முத்தாலங் குறிச்சி, குட்டைகால், கொள்ளீர் குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி, கருங்குளம், பெட்டைகுளம், கிருஷ்ணன் குளம், வீரளபேரிகுளம், கால்வாய்குளம் உள்பட பல்வேறு குளங்களின் மூலம் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.

    சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் உள்ள பயிர்கள் நன்கு விளைந்திருந்தது. விவசாயிகள் எதிர் பார்த்ததை விட நல்ல மகசூல் அடையும் நிலை உள்ளது. அறுவடை எந்திரங்களை வயலுக்குள் இறக்கி அறுவடை செய்ய விவசாயிகள் தயாரான போது கடந்த 13-ந்தேதி காலை 10 மணிக்கு திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மழையால் நெல் பயிர்கள் சாய்ந்து விட்டன. இனி இரண்டு நாட்களுக்குள் அறுவடை செய்யாவிட்டால் பயிர் முளைத்து பயனற்று போய் விடும் என நினைத்தனர். ஆனாலும் ஓரளவு மழை அளவு குறைந்து விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு விட்டது.

    இதனால் மருதூர் மேலணையில் மிக அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் மழைக்காலத்தில் ஊருக்குள் புகுவது போல விட்டிலாபுரம், செய்துங்க நல்லூர், அண்ணாநகர், கலைஞர்நகர் உள்பட பல பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்து விட்டது.

    அதோடு மட்டுமல்லாமல் உடைந்த மடைகளால் தண்ணீர் வயலுக்குள் புகுந்து விட்டது. இதனால் அறுவடை செய்ய காத்திருந்த பயிர்கள் மேலும் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்த காரணத்தினால் அறுவடை எந்திர தட்டுப்பாடு இருந்தது. பல இடங்களில் இருந்தும் புரோக்கர்கள் மூலம் எந்திரங்கள் ஏற்பாடு செய்த நேரத்தில் மழை பெய்து விட்டது. இதனால் பயிர்கள் மடிந்து விட்டன. தற்போது சேர்வலாறு தண்ணீரை சம்பந்தமில்லாமல் திறந்து வயல்வெளிகளை வீணடித்து விட்டார்கள்.

    வீணாக செல்லும் இந்த தண்ணீரை சேர்த்து வைத்தால் குடிதண்ணீருக்கு உதவும் அல்லது அறுவடை காலம் முடியும் வரை காத்திருந்து தண்ணீரை மராமத்து பணிக்கு விட்டிருந்தால் பழந்தொழி என்னும் முன்கார் சாகுபடி செய்ய உதவியாக இருக்கும். ஆனால் தற்போது யாருக்கும் உபயோகம் இல்லாமல் போய் விட்டது என வேதனையுடன் கூறினர்.
    Next Story
    ×