search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை மிரட்டியதால் சிறுவனை கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    தந்தை மிரட்டியதால் சிறுவனை கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்

    சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகேயுள்ள நெசப்பாக்கம் பாரதி நகர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (வயது10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    சிறுவன் ரித்தேஷ் சாய் நேற்று முன்தினம் மாலை இந்தி டியூசனுக்கு சென்றான். அவனை அழைத்து வர தந்தை கார்த்திகேயன் சென்றார். அப்போது நாகராஜ் என்பவர் சிறுவனை அழைத்து சென்றதாக கூறினார்கள்.

    சிறுவனை நாகராஜ் கடத்தி சென்றதாக அவனது தந்தை கார்த்திகேயன் எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்போன் மூலம் வேலூரில் பதுங்கி இருந்த நாகராஜை கைது செய்தனர்.

    அவனிடம் விசாரித்த போது சிறுவனை சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்தான். அவனிடம் விசாரித்தபோது சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் தனக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சிறுவனை கொலை செய்ததாகவும் தெரிவித்தான்.

    இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்து எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-


    எனக்கும் சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. நாங்கள் ஒன்றாக இருந்ததை சிறுவன் ரித்தேஷ் பார்த்துவிட்டான். இதை அவன் தந்தை கார்த்திகேயனிடம் தெரிவித்தான். அவர் எங்களை கண்டித்தார். அதன்பிறகும் எங்களின் தொடர்பு நீடித்தது.

    இதனால் கார்த்திகேயன் போலீசில் புகார் செய்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினார். நான் ஜெயிலில் இருந்து திரும்பிய பிறகும் எனக்கு தொல்லைகள் கொடுத்து வந்தார். அடிக்கடி போன் செய்து மிரட்டினார்.

    அதன்பிறகு மஞ்சுளாவும் என்னுடன் பழகுவதை குறைத்துக் கொண்டார். படிப்படியாக என்னுடன் பேசுவதையும் நிறுத்தினார். மஞ்சுளா அடிக்கடி எனக்கு பணம் கொடுத்து வந்தார். தொடர்பை துண்டித்த பிறகு பணம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டார். முழுமையாக என்னிடம் இருந்து விலகினார். இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கார்த்திகேயனையும் மஞ்சுளாவையும் மிரட்ட நினைத்தேன்.

    இதற்காக சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்தி சென்றேன். கார்த்திகேயனை மிரட்டி விட்டு சிறுவனை விட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் சிறுவனை விட்டுவிட்டால் அவன் உண்மையை சொல்லி விடுவான். கார்த்திகேயனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்து அவனை கொன்றேன்.

    இவ்வாறு நாகராஜ் வாக்குமூலம் அளித்தான்.

    சிறுவனின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதை அறிந்ததும் உறவினர்களும், அந்த பகுதி மக்களும் திரண்டு சென்று சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    சிறுவன் கொலை தொடர்பாக மஞ்சுளாவை எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. விசாரணையின் முடிவில் கொலைக்கு அவர் உடந்தை இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். #Tamilnews
    Next Story
    ×