search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2ஜி வழக்கு தீர்ப்பு ஏற்புடையது அல்ல: மதுரையில் எச்.ராஜா பேட்டி
    X

    2ஜி வழக்கு தீர்ப்பு ஏற்புடையது அல்ல: மதுரையில் எச்.ராஜா பேட்டி

    2ஜி வழக்கு தீர்ப்பு ஏற்புடையது அல்ல. சத்தம் போட்டு பேசுவதால் தவறு சரியாகிவிடாது என்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

    மதுரை:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2ஜி வழக்கில் நீதிபதி சைனி வழங்கிய தீர்ப்பு ஏற்புடையது அல்ல. இது அப்பீலுக்கு உகந்த தீர்ப்பாகும். வழக்கு ஆவணங்களில் மூத்த அதிகாரிகள் கையெழுத்து போடவில்லை என்றும், குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

    சந்தேகத்தின் அடிப்படையில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தற்காலிகமாக தப்பித்துள்ளனர். 2ஜி வழக்கின் தீர்ப்பு காரணமாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சிலர் கூச்சலிடுகிறார்கள்.

    2ஜி வழக்கு கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்தபோது போடப்பட்ட வழக்கு ஆகும். சத்தம் போட்டு பேசுவதால் தவறு சரியாகிவிடாது.

    மத்திய அரசின் முன்னாள் தணிக்கை அதிகாரி ராய் வெளியிட்ட அறிக்கையில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த அறிக்கையை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1280 லைசென்சுகளையும் ரத்து செய்தது.

    எனவே 2ஜி வழக்கில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு தற்காலிக பின்னடைவுதான். இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட பா.ஜனதா தொடர்ந்து போராடும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குன்கா எதிரான தீர்ப்பை வழங்கினார். நீதிபதி குமாரசாமி ஆதரவான தீர்ப்பை வழங்கினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் தர்மம் வென்றது. அது போல 2ஜி வழக்கிலும் நீதி கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் 2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×