search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை: தந்தை - மகன் உள்பட 3 பேர் கைது
    X

    உடுமலையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை: தந்தை - மகன் உள்பட 3 பேர் கைது

    உடுமலையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை - மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் மாரிமுத்து (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

    மாரிமுத்து புதுநகர் ருத்தரபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரின் அவசர தேவைக்காக மாரியம்மாள் வீட்டு பத்திரத்தை அதே பகுதியை சேர்ந்த வாய்க்கால்துரை (48) என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.5 ஆயிரம் வாங்கி கொடுத்தார்.

    சில நாட்களுக்கு பின்னர் அடமானம் வைத்த பத்திரத்தை மீட்க மாரியம்மாள் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். ஆனால் வீட்டு பத்திரத்தை தர மறுத்து வாய்க்கால்துரை இழுத்தடித்தாக தெரிகிறது.

    இந்நிலையில் கடந்த 3-ந்தேதி மாரிமுத்து பத்திரத்தை கேட்டு வாய்க்கால்துரையிடம் சென்றார். அப்போது வீட்டில் வாய்க்கால்துரை, அவரது மகன் ரமேஷ் (25), ரமேசின் நண்பர் சூர்யா ஆகியோர் இருந்தனர்.

    வீட்டு பத்திரம் குறித்து மாரிமுத்துவுக்கும் வாய்க்கால்துரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாய்க்கால்துரை மற்றும் அவரது மகன் ரமேஷ், நண்பர் சூர்யா ஆகியோர் உருட்டுக்கட்டையால் மாரிமுத்துவை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்த மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து ஆஸ்பத்திரி முன்பு மாரிமுத்துவின் உறவினர்கள் குவிந்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் குமரலிங்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி ஆகியோர் வாய்க்கால்துரை, அவரது மகன் ரமேஷ், நண்பர் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×