search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கோப்பையை சென்னை 4-வது முறையாக வெல்லுமா?- மும்பையுடன் நாளை இறுதிப்போட்டி
    X

    ஐபிஎல் கோப்பையை சென்னை 4-வது முறையாக வெல்லுமா?- மும்பையுடன் நாளை இறுதிப்போட்டி

    ஐதராபாத்தில் நாளை நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கியது. ‘லீக்‘ ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி முடிவடைந்தது. இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பிளேப் ஆப்’ சுற்று கடந்த 7-ந்தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் 8-ந்தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து வெளியேற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்று உள்ளன. இதனால் 4-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி 8-வது முறையாகவும், மும்பை அணி 5-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தாலும் மும்பையிடம் 3 முறை தோல்வியை தழுவியது. இரண்டு ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் சரண்டர் ஆகி இருந்தது.

    இதற்கு நாளைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பழி தீர்த்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்த அனைத்து துறைகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சிறப்பாக செயல்பட்டு கடுமையாக போராட வேண்டியது அவசியமாகும்.

    முதல் தகுதி சுற்றில் சென்னை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதில் இருந்து மீண்டு 2-வது தகுதி சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் டோனி நல்ல நிலையில் உள்ளார். அவர் 14 ஆட்டத்தில் 414 ரன் எடுத்து உள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். ஸ்டிரைக்ரேட் 137.54 ஆகும். ரெய்னா 375 ரன்னும், டுபெலிசிஸ் 370 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.


    வாட்சன் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே. டெல்லி அணிக்கு எதிராக அவர் அதிரடியை வெளிப்படுத்தினார். வாட்சன் 2 அரை சதத்துடன் 318 ரன்னும், அம்பதி ராயுடு 281 ரன்னும் எடுத்து உள்ளனர்.

    சி.எஸ்.கேயின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் 24 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 16 விக்கெட்டும், ஜடேஜா 15 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் 19 விக்கெட் கைப்பற்றி நல்ல நிலையில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 2-வது வேகப்பந்து வீரரை (‌ஷர்துல்தாக்கூர்) சேர்த்ததில் எந்த பலனும் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் என்ற முறையில் முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து டோனி முடிவு செய்வார்.

    சென்னை அணியை 3 முறை வீழ்த்தி இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணி மீண்டும் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    மும்பை அணியில் வெற்றியை நிர்ணயம் செய்யக்கூடிய பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இது அந்த அணியின் பலமே.

    பேட்டிங்கில் குயின்டன் டி காக் (4 அரை சதத்துடன் 500 ரன்), சூர்யகுமார் யாதவ் (409), கேப்டன் ரோகித் சர்மா (390), இஷான்கி‌ஷன் ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15), ராகுல் சாஹர் (12), குணால் பாண்ட்யா (11) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட் முத்திரை பதிக்க கூடியவர்கள். ஹர்த்திக் பாண்ட்யா 386 ரன் குவித்துள்ளார். 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான அணிகள் மோதுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    Next Story
    ×