search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் அணியை பழிதீர்த்து - ராஜஸ்தான் ராயல்ஸ் 5-வது வெற்றி
    X

    ஐதராபாத் அணியை பழிதீர்த்து - ராஜஸ்தான் ராயல்ஸ் 5-வது வெற்றி

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. #IPL2019 #SRHvsRR #IPL2019 #SRHvsRR

    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன், ஆஷ்டன் டர்னர் இடம் பிடித்தனர். ஐதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோ தாயகம் திரும்பி விட்டதால் விக்கெட் கீப்பர் இடத்திற்கு விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

    இதன் பின்னர் டேவிட் வார்னரும், மனிஷ் பாண்டேவும் இணைந்து சரிவை தடுத்தனர். ஆனால் வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக ஆடினார். 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்ற போதிலும் அவர் பந்தை ஒரு முறை கூட எல்லைக்கோட்டிற்கு விரட்ட முடியாமல் தவித்தது ஆச்சரியம் அளித்தது. அதே சமயம் பாண்டே வேகம் காட்டினார். 11.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 180 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும், நிலைமை தலைகீழாக மாறியது.




    டேவிட் வார்னர் 37 ரன்களில் (32 பந்து) கேட்ச் ஆனார். மனிஷ் பாண்டே 61 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினார். விஜய் சங்கர் (8 ரன்), தீபக் ஹூடா (0), விருத்திமான் சஹா (5 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. எப்படியோ கடைசி ஓவரில் ரஷித்கான் (17 ரன், நாட்-அவுட்) பவுண்டரி, சிக்சர் அடித்து அணி 150 ரன்களை கடப்பதற்கு உதவினார்.

    20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன், ஒஷானே தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும், லிவிங்ஸ்டோனும் (இங்கிலாந்து நாட்டவர்) அட்டகாசமான தொடக்கத்தை தந்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவருக்குள் 60 ரன்களை திரட்டினர். ரன்மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய லிவிங்ஸ்டோன் 44 ரன்களில் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ரஹானே 39 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் சுமித் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.



    ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டர்னர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தானுக்கு இது 5-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. 11-வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 6-வது தோல்வியாகும். #IPL2019 #SRHvsRR

    Next Story
    ×