search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
    X

    பெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

    பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112 ரன்னிற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது.

    43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸதிரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் முதல் பந்தை சந்திக்க ஸ்டார்க் பந்து வீச்சை தொடங்கினார். ஆட்டத்தின் 4-வது பந்திலேயே லோகேஷ் ராகுல் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த புஜாரா 4 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. ஆனால் நாதன் லயன் பந்தில் விராட் கோலி (17), முரளி விஜய் (20) அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் இந்தியா 55 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.


    ரகானே விக்கெட்டை சாய்த்த சந்தோசத்தில் ஹசில்வுட்

    5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 43 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 98 ரன்னாக இருக்கும்போது ரகானே 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரகானே அவுட்டானதும் இந்தியாவின் இன்னிங்ஸ் ஓரளவு முடிவிற்கு வந்ததாக கருதப்படுகிறது.

    6-வது விக்கெட்டுக்கு விஹாரி உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தற்போது வரை இந்தியா 41 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


    டிம் பெய்னின் மகிழ்ச்சியும், விராட் கோலியின் சோகமும்

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 175 ரன்கள் என்பது மிகக்கடினம். மேலும், தற்போது களத்தில் இருக்கும் ஜோடி பிரிந்தால், இந்தியாவின் இன்னிங்சை உடனடியாக முடிவிற்கு வர வாய்ப்புள்ளது.
    Next Story
    ×