search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை - தவான், ரோகித் சர்மாவின் அபார சதத்தால் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி இந்தியா வெற்றி
    X

    ஆசிய கோப்பை - தவான், ரோகித் சர்மாவின் அபார சதத்தால் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி இந்தியா வெற்றி

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அபார சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். #AsiaCup2018 #INDvPAK
    துபாய் :

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரில் சாகல் வீசிய பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார்.

    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் பகர் சமான் 31 ரன்கள், பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.



    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் ரன்வேகத்தில் தடை ஏற்பட்டது.

    இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதனால், 238 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியா சேசிங் செய்ய தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தையும், ரோகித் சர்மா நிதான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

    இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளார்கள் திணறினர். அணியின் எண்ணிக்கை 91 ஆக இருந்த போது தவான் அரை சதம் அடித்தார். அவரை தொடர்ந்து 65 பந்துகளில் ரோகித் சர்மாவும் அரை சதம் அடித்தார். இதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்த இந்த ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.

    இதனால், இந்திய அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது, 95 பந்துகளை சந்தித்த நிலையில் ஷிகர் தவான் தனது 15 சதத்தை அடித்து அசத்தினார். ஆசிய கோப்பை தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். பின்னர் 94 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா.

    தவான் மற்றும் ரோகித் ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், அணியின் எண்ணிக்கை 210 ஆக இருக்கும் போது தவான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி 114 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எண்ணிக்கை இதுவாகும். அடுத்து ராயுடு களமிறங்கிய சிறிது நேரத்தில் 106 பந்துகளில் தனது 19 ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.

    இறுதியில் 39.3 ஓவர்கள் முடிவில் 238 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை அடித்து நொறுக்கி இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 111 ரன்களுடனும் ராயுடு 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். #AsiaCup2018 #INDvPAK 
    Next Story
    ×