search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?
    X

    நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

    6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது.

    ஒருநாள் தொடரில் விளையாடிய ரகானே, கேதர் ஜாதவ், ஷ்ரேயாஸ் அய்யர் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.  அவர்களுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, உனத் கட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியேர் களம் இறங்குவார்கள். 3-வது வீரராக விராட் கோலி களம் இறங்குவார். டோனி விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா களம் இறங்குவார். பும்ரா, புவனேஸ்வர குமார், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய பந்து வீச்சாளர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்தியா நான்கு முதன்மை பந்து வீச்சாளர்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவை முதன்மை பந்து வீச்சாளராக தேர்வு செய்தால் ரகானே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இடத்தில் தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே மற்றும் ரெய்னா ஆகியோரின் இருவர் சேர்க்கப்படலாம்.

    அதேவேளையில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்க விரும்பினால், மேற்கண்ட மூன்று பேரில் ஒருவர்தான் இடம்பெற முடியும். இதனால் அந்த இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நம்பிக்கையுடன் இந்தியா டி20 தொடரை எதிர்கொள்ளும்.

    அதேவேளையில் ஒருநாள் தொடரை மோசமான வகையில் இழந்த தென்ஆப்பிரிக்கா, டி20 தொடர் மூலம் சரிகட்ட நினைக்கும். அந்த அணி டுமினி தலைமையில் களம் இறங்குகிறது.

    தென்ஆப்பிரக்கா அணியில் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் கிளாசன், பெஹார்டியன், கிறிஸ் மோரிஸ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் இருக்கும் அதேவேளையில் பிரபலமான பந்து வீச்சாளர்கள் இல்லை. இது தென்ஆப்பிரிக்காவிற்கு சற்று பாதகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    2-வது டி20 21-ந்தேதி செஞ்சூரியனிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதி கேப் டவுனில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
    Next Story
    ×