search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
    X

    பிக் பாஷ் கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #MelbourneRenegades #BrisbaneHeat

    பிரிஸ்பேன்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. 

    டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஹாரிசும், மேத்தீவ் ஷார்ட்டும் களமிறங்கினர். இருவரும் மெல்பொர்ன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.  ஹாரிஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷார்ட் உடன் டாம் கூப்பர் ஜோடி சேர்ந்து ரன் குவித்தனர்.

    இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஷார்ட் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. டாம் கூப்பர் 65 ரன்களுடன் களத்தில் இருந்தார். பிரிஸ்பேன் அணி பந்துவீச்சில்  ஜொஷ் லாலர், மார்க் ஸ்டெக்கீட், மிச்செல் ஸ்வீப்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹிட் அணி களமிறங்கியது. பிரிஸ்பேன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாம் ஹீஸ்லெட் 3 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரண்டன் மெக்கல்லம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கிறிஸ் லைன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மேட் ரென்ஷா 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அப்போது பிரிஸ்பேன் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. அலெக்ஸ் ரோஸ் 36 ரன்களும், பென் கட்டிங் 35 ரன்களும் எடுத்தனர். இதனால் பிரிஸ்பேன் அணி 19.5 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் அணியின் ஜிம்மி பியர்சன் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் அணி பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்களும், கிறிஸ் ட்ரிமெய்ன், வெய்ன் பிராவோ தலா மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.



    முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன.

    அடுத்து 1-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ், ஹோபார்ட் ஹரிகேன்சை எதிர்கொள்ள இருக்கிறது. அதைத்தொடர்ந்து 2-ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இறுதிப்போட்டி 4-ம் தேதி நடைபெற உள்ளது. #BBL07 #MelbourneRenegades #BrisbaneHeat
    Next Story
    ×