search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    2-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

    2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பகர் சமான், பாபர் ஆசம் ஆட்டத்தால் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. #NZvPAK
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    பாகிஸ்தான் 10 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் ஜோடி பிரிந்தது. அஹமது ஷேசாத் 34 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    மற்றொரு தொடக்க வீரரான பகர் சமான் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சர்பிராஸ் அஹமது 24 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



    கடைசி பந்தில் பவுண்டரி அடித்து பாபர் ஆசம் 29 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அத்துடன் பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

    பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கொலின் முன்ரோ 1 ரன் எடுத்த நிலையில் மொகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடக்க வீரர் கப்தில் 26 ரன்னிலும், ப்ரூஸ் 11 ரன்னிலும், விக்கெட் கீப்பர் பிலிப்ஸ் 5 ரன்னிலும், கிராண்ட்கோம் 10 ரன்னிலும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியானது.

    அதன்பின் வந்த சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் 37 ரன்னும், வீலர் 30 ரன்களும் சேர்க்க 18.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து நியூசிலாந்து ஆல்அவுட் ஆனது.



    இதனால் பாகிஸ்தான் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது அமிர் 2 விக்கெட்டும், பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 28 பந்தில் 50 ரன்கள் அடித்த பகர் சமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், 7-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந்தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். #NZvPAK
    Next Story
    ×