search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக தடகள போட்டிக்கான இந்திய அணியில் சுதாசிங் பெயர் இடம் பெற்றதால் குழப்பம்
    X

    உலக தடகள போட்டிக்கான இந்திய அணியில் சுதாசிங் பெயர் இடம் பெற்றதால் குழப்பம்

    சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்ட போட்டியில் பங்கேற்போரின் பட்டியலில் சுதாசிங்கின் பெயர் இடம் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    புவனேஸ்வரத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய தடகளத்தில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சுதாசிங் லண்டனில் (ஆகஸ்டு 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) நடக்கும் உலக தடகள போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்ட போட்டியில் பங்கேற்போரின் பட்டியலில் சுதாசிங்கின் பெயரும் இடம் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து சுதாசிங்கிடம் நேற்று கேட்ட போது, ‘உலக தடகளத்தில் கலந்து கொள்வோரின் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றதை அறிந்தேன். ஆனால் இந்திய அணியில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பது குறித்து இந்திய தடகள சம்மேளனம் எதுவும் என்னிடம் கூறவில்லை. விசா தயாராக இருக்கிறது. இந்திய தடகள சம்மேளனம் சொன்னால் போதும், உடனடியாக லண்டன் புறப்பட தயாராக உள்ளேன். எனது பெயர் தாமதமாக சேர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது’ என்றார்.தடகள அணியின் தேசிய உதவி பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர், உலக தடகள போட்டியில் சுதாசிங் விளையாடமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடகள சம்மேளனமும், முதலில் தகுதி இலக்கை நெருங்கும் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை எல்லாம் சேர்த்து பெரிய பட்டியலை ‘ஆன்-லைன்’ மூலம் சர்வதேச தடகள சம்மேளனத்திடம் பதிவு செய்வார்கள். பிறகு அந்த பட்டியல் இறுதி செய்யப்படும் போது சில பெயர்கள் நீக்கப்படும். அந்த வகையில் சுதாவின் பெயரை நீக்க மறந்ததால் இத்தகைய சலசலப்புக்கு வழிவகுத்து விட்டது தெரியவந்தது.

    இதற்கிடையே ஆசிய தடகளத்தில் தங்கம் வென்றும் உலக தடகள போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாததால் அதை எதிர்த்து 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.யூ.சித்ரா, கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு அவரை உலக தடகள போட்டியில் விளையாட வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய தடகள சம்மேளனத்திற்கும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சித்ராவை உலக தடகள போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க அனுமதிக்கும்படி இந்திய தடகள சம்மேளனம் விடுத்த வேண்டுகோளை சர்வதேச தடகள சம்மேளனம் நேற்று நிராகரித்து விட்டது. 
    Next Story
    ×