search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறையில் திருப்பதியில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
    X

    கோடை விடுமுறையில் திருப்பதியில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு 25 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
    திருமலை:

    திருமலை- திருப்பதி தேவஸ்தான அன்னமய பவனத்தில் பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கினார். தொடர்ந்து பக்தர்களிடம் தொலைபேசி வாயிலாக குறைகளை கேட்டறிந்து அதற்கு பதிலளித்தார்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் (மே) இதுவரை இல்லாத அளவிற்கு 25 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் அனைத்து இலாகா அதிகாரிகள், சிப்பந்திகள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு சேவை புரிந்தது பாராட்டுக்குரியது.

    வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அஷ்டபந்தன பாலாலயா மகா சம்பிரோக்‌ஷனம் நடக்கிறது.

    திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு சப்தகிரி மாதா புத்தகம் சந்தா முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சம் பக்தர்களுக்கு சப்தகிரி மாதா சந்தா முறையில் வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் அருகே உள்ள ஆசான மண்டபத்தில் 600 பேர் அமரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேவஸ்தானத்திற்கு சம்பந்தப்பட்ட ஐதராபாத்தில் உள்ள வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தெப்பத்திருவிழா 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 13-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள போக சீனிவாசமூர்த்திக்கு நாளை சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடக்கிறது. கோவில் தங்க வாசலில் காலை 6 மணி அளவில் இந்த சிறப்பு சகஸ்ர கலசாமிபஷேகம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாச ராஜூ, இணை அதிகாரி லட்சுமிகாந்தம் உள்பட கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×