search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் மின்சாரம் இன்றி தவிக்கும் 1.64 லட்சம் குடும்பங்கள்
    X

    ஒடிசாவில் மின்சாரம் இன்றி தவிக்கும் 1.64 லட்சம் குடும்பங்கள்

    பானி புயல் காரணமாக ஒடிசாவில் 1.64 லட்சம் குடும்பங்கள் மின்சார வசதி இன்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புவனேஸ்வர்:

    கடந்த மே மாத தொடக்கத்தில் பானி என்ற பெயர் கொண்ட புயல் ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இந்த புயல் ஒடிசா மாநில வரலாற்றில் மிகவும் மோசமான புயல் தாக்குதலாக கருதப்படுகிறது.

    இந்த புயலில் கோர தாக்கத்தில் 64 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 1 கோடியே 65 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

    இந்நிலையில் புயல் தாக்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையே காணப்படுகிறது. குடிநீர் வினியோகம், தொலைத்தொடர்பு மற்றும் பிற சேவைகள் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது.

    ஆனால் மின்சார வினியோகம் இப்போதுவரை பல்வேறு கிராமப்புற பகுதிகளில் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த மூத்த மின்வாரியத்துறை அதிகாரி ஒருவர், புயலின்போது 25 இலட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அதில் 23 இலட்சத்து 36 ஆயிரம் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 1.64 லட்சம் குடும்பங்களுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    இம்மாத இறுதிக்குள் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் முழுமையாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரியத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி உதவி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட திறந்த வெளிப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு தலா 95 ஆயிரத்து 100 ரூபாயும், மலைப்பகுதியில் புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 1 இலட்சத்து 1900 ரூபாயும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×