search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.3.62 கோடி வருமான வரி பாக்கி - காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் டெல்லி வீடு முடக்கம்
    X

    ரூ.3.62 கோடி வருமான வரி பாக்கி - காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் டெல்லி வீடு முடக்கம்

    பல ஆண்டுகளாக 3 கோடியே 62 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு சொந்தமான டெல்லி வீட்டை அதிகாரிகள் இன்று முடக்கி சீல் வைத்தனர். #ITattaches #Geelanihouse #taxevasion
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முன்னர் ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர் இயக்கத்தில் செயல்பட்ட தெஹ்ரிக்-இ-ஹுரியத் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானி. இவர் பலமுறை தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைதாகியுள்ளார். வன்முறை தொடர்பான சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    நிதியாண்டு 1996-97 முதல் 2001-02 வரை இவர் செலுத்த வேண்டிய வருமான வரியை கட்டாமல் இழுத்தடித்து வந்தார்.

    இந்நிலையில், வருமான வரித்தொகை பாக்கியான 3 கோடியே 62 லட்சத்து 62 ஆயிரத்து 160 ரூபாயை சுமார் 16 ஆண்டுகளாகியும் செலுத்த தவறியதால் தெற்கு டெல்லியின் மாலவியா நகரில் உள்ள சையத் அலி ஷா கிலானிக்கு சொந்தமான வீட்டுக்கு ‘சீல்’ வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று முடக்கி விட்டனர். 

    இந்த வீட்டை வேறு யார் பெயருக்கும் கிலானி மாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வீட்டை ஏலம்விட்டு வருமான வரி பாக்கியை சரிகட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    வெளிநாட்டு பணப்பரிமாற்ற சட்டங்களை மீறிய வகையில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்ததாக கிலானிக்கு எதிராக சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் பொருளாதார அமலாக்கத்துறை அவருக்கு 14.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது நினைவிருக்கலாம். #ITattaches #Geelanihouse #taxevasion  
    Next Story
    ×