search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது - மோடி பெருமிதம்
    X

    நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது - மோடி பெருமிதம்

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தென்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #Changeisvisible #Modi #GlobalBuisnessSummit
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்தகால ஆட்சியின்போது முடிவெடுப்பதில் இருந்த முடக்கநிலை மாறி தற்போது பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

    முன்பெல்லாம் வளர்ச்சி என்பது காகித வடிவத்தில் இருந்து பின்னர் செயல்வடிவம் பெற்றது. தற்போது செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள வெற்றிகள் காகித குறிப்புகளாக மாறி வருகிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    இந்த மாநாட்டில் மோடிபேசியதாவது:-

    முன்னர் வெளிநாடுகளிடம் போட்டி போட்டுக்கொண்டிருந்த நாம் உள்நாட்டிலேயே தற்போது போட்டியிட ஆரம்பித்திருக்கிறோம்.



    100 சதவீதம் கழிப்பறை வசதியா? 100 சதவீதம் மின்சார இணைப்பா?100 சதவீதம் சாலை வசதியா? 100 சதவீதம் எரிவாயு அடுப்புகளா? 100 சதவீதம் அளவுக்கு ஏழைகள் அனைவருக்கும் வீட்டு வசதியா? என அரசின் அத்தனை துறைகளிலும் இன்று போட்டி மனப்பான்மை உருவாகி வருகிறது.

    இவை மட்டுமின்றி, மத்திய அரசின் துறைகளுக்கு இடையில் போட்டி, முன்னேற்றத்தை எட்டுவதிலும், போட்ட திட்டத்தை முட்டித்துக் காட்டுவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் மாநிலங்களுக்கு இடையேயும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்த வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் சீரமைப்பு கொள்கைகள் முக்கிய காரணமாக இருந்துள்ளன. எங்கள் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ள அதே வேளையில் பணவீக்கத்தின் அளவும் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    உலக அளவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் முன்னர் 65-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 40-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சுற்றுலாவின் மூலம் ஈட்டப்பட்ட அன்னியச் செலாவணியின் அளவும் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    மக்களுக்கு சேவையாற்ற வந்த எங்கள் அரசின் ஆட்சிக்காலத்தில் இத்தகைய சீர்திருத்தங்களின் மூலம் பொருளாதார ரீதியாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

    ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் வரை வரவு-செலவு செய்யும் நிறுவனங்கள் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. 1.5 கோடி ரூபாய் வரை வரவு-செலவு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.   #Changeisvisible #Modi #GlobalBuisnessSummit
    Next Story
    ×