search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - வாக்களித்த பின் சச்சின் பைலட் பேட்டி
    X

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - வாக்களித்த பின் சச்சின் பைலட் பேட்டி

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் வாக்களித்த பின் நம்பிக்கை தெரிவித்தார். #RajasthanElections2018 #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.



    முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ராபதான் தொகுதி ஜலாவரில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    பின்னர் வெற்றிச் சின்னத்தைக் காட்டியபடி வெளியே வந்த ரத்தோர், ஒவ்வொரு ஓட்டும்  முக்கியமானது என தெரிவித்தார். உண்மையில் நாட்டை யார் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து நமது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றும் ரத்தோர் கேட்டுக்கொண்டார்.

    மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா உதய்பூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு, வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் ஜோத்பூரில் ஓட்டு போட்டார்.

    ராஜஸ்தானில் காலை 11 மணி நிலவரப்படி 22 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  #RajasthanElections2018 #SachinPilot
    Next Story
    ×