search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்
    X

    சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்

    சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #Sabarimala #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.



    இதற்கிடையில், நாளை (17-ந்தேதி) சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்தும், கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பினராயி விஜயன் ‘‘சட்ட ஒழுங்கை யாரும் அவர்களது கையில் எடுக்க நாங்கள் விடமாட்டோம். சபரிமலைக்கு பக்தகர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வகை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

    கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவோம் என்று நாங்கள் கோர்ட்டில் கூறியுள்ளோம்’’ என்றார்.  #Sabarimala #PinarayiVijayan
    Next Story
    ×