search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிடிவாதம்
    X

    கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிடிவாதம்

    கர்நாடகாவில் நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் மந்திரி சபையை உடனடியாக விரிவாக்கம் செய்யும்படி அதிருப்தி எம்.எல்.எ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில், ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது, சில மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியடைந்தனர்.

    அதிருப்தியாளர்களை சமாதானம் செய்யும் வகையில், வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரி சபையை விரிவுபடுத்தி அதிருப்தியாளர் சிலருக்கு மந்திரி பதவி வழங்க கூட்டணி தலைமை முடிவு செய்திருந்தது.

    இந்நிலையில், நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனபோதிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி.பாட்டீல், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாதது குறித்து ட்விட்டர் மூலம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

    இதேபோல், மந்திரி பதவியை எதிர்பார்த்த சிலரும், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

    அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்கள். இல்லையெனில், டெல்லிக்கு சென்று கட்சியின் மேலிட தலைவர்களை இது தொடர்பாக சந்தித்து பேசுவதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நாளை பெங்களூரு வரவுள்ள, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் வேணுகோபாலிடம், அதிருப்தியாளர்கள் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

    அதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அதிருப்தியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
    Next Story
    ×