search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா? ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா? ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா? என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #KeralaFloods #MullaperiyarDam #SC
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம், உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



    இந்நிலையில் அணை பலவீனமாக இருப்பதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைப்பது குறித்து ஆலோசிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அணையின் துணை கண்காணிப்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து எடுக்கும் முடிவை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, இன்று பிற்பகல் இரண்டு குழுக்களும் அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 139 அடியை தாண்டாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த குழு ஆராயும்.

    மேலும் அணைப் பகுதியில் மக்களின் பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேரள அரசு 24-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaFloods #MullaperiyarDam

    Next Story
    ×