search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் காப்பகம் விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
    X

    குழந்தைகள் காப்பகம் விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

    பீகாரின் முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.#MuzaffarpurShelterHome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரித்து வருகிறது.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

    இதனை அடுத்து, குமாரி மஞ்சு வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நாடு முழுவதும் 286 சிறுவர்கள் உள்பட 1575 சிறார்கள் உடல் ரீதியான, பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை சந்தித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 

    இதனை அடுத்து, ‘1575 சிறார்கள் துன்புறுத்தலை சந்தித்துள்ளனர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இதுபோன்ற காப்பகங்களை இன்னும் ஏன் வைத்துள்ளீர்கள்?’ என நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 
    மேலும், குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 
    Next Story
    ×