search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை குறி வைக்கும் அமித்ஷா
    X

    கர்நாடகாவை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை குறி வைக்கும் அமித்ஷா

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் அடுத்த இலக்காக 2019 பாராளுமன்ற தேர்தல் இருக்கிறது. #AmitShah #Karnatakaelection #Parliamentelection

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் தனி பெரும்பான்மை பெற முடியாததால் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்தது.

    மெஜாரிட்டியை நிரூபிக்க போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்-மந்திரி எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி கர்நாடக முதல்-மந்திரி பதவி ஏற்கிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள அரசு தானாகவே கவிழும் என்று பா.ஜனதா நம்பிக்கையுடன் உள்ளது.

    இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், முன்னாள் சட்ட மந்திரியுமான சுரேஷ் குமார் கூறும் போது கர்நாடகாவின் புதிய அரசை நாங்கள் ஒன்றும் செய்யப் போவது இல்லை. இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழந்துவிடும் என்றார்.

    கர்நாடகா பா.ஜனதாவின் அடுத்த இலக்கு பாராளுமன்ற தேர்தல் ஆகும். மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 23 இடங்களை கைப்பற்றுவதில் இலக்காக உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 17 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.

    கர்நாடக தேர்தல் போராட்டம் முடிந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் அடுத்த இலக்காக 2019 பாராளுமன்ற தேர்தல் இருக்கிறது. இந்த தேர்தல் சவாலாக இருக்கும் என்பதால் பா.ஜனதா இப்போதே கவனம் செலுத்த தொடங்கி விட்டது.


    பா.ஜனதா ஆட்சி செய்யாத மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கு தேசம் ஆகிய மாநிலங்களில் அமித்ஷா கவனம் செலுத்துகிறார்.

    இந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 105 தொகுதிகள் உள்ளன. மேற்கு வங்காளத்தில் 42 இடங்களும், ஒடிசாவில் 21 தொகுதிகளும், ஆந்திராவில் 25 இடங்களும், தெலுங்கானாவில் 17 தொகுதியும் உள்ளன. இந்த 4 மாநிலங்களில் அமித்ஷா விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்.

    இது தொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமண் கூறும் போது, “கர்நாடகாவில் தேர்தல் நடைமுறை முடிந்துவிட்டது. பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதாவின் அடுத்த இலக்காக இருக்கிறது. இதில் அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தெலுங்கானா. அடுத்த மாதம் அமித்ஷா தெலுங்கானா வருகிறார். தேர்தல் திட்டம் குறித்து ஆலோசிக்கிறார்.

    மேற்கு வங்காளம், ஆந்திரா, ஒடிசாவில் இந்த முறை கூடுதல் இடங்களை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அமித்ஷா இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும், ஆந்திராவில் தெலுங்கு தேசமும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்.சும் ஆட்சி செய்கின்றன.

    இதே போல நவம்பர்- டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கவனம் செலுத்துகிறது. #AmitShah #Karnatakaelection #Parliamentelection

    Next Story
    ×