search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த 1.48 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை
    X

    பிறந்த 1.48 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை

    மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்று மகாராஷ்ட்ரா மாநில பெண் குழந்தை சாதனை படைத்துள்ளது. பிறந்த 1.48 நிமிடத்திற்குள் குழந்தைக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது சாதனையாக அமைந்துள்ளது.

    சாச்சி என பெயரிடப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர் இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருக்கின்றனர். மகாராஷ்ட்ராவின் புல்தானா பகுதியை சேர்ந்த பெற்றோர் குழுந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் அவர்களின் ஆதார் அட்டை மூலம் பால் ஆதார் பெற்றிருக்கின்றனர். 

    வழக்கமான ஆதார் எண் பெற நமது பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும் நிலையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாமல் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த சேவை பால் ஆதார் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் மட்டும் பயன்படுத்தி குழந்தை பிறந்த 1.48 நிமிடங்களில் பால் ஆதார் பெறப்பட்டிருக்கிறது.


    கோப்பு படம்: பால் ஆதார்

    பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு அனைவரும் அறிந்ததே. இந்த கனவை நன்கு உணரும் வகையில் குழந்தைக்கு ஆதாரில் பதிவு செய்து, மேலும் பல்வேறு திட்டங்களில் ஆதாரை இணைப்பேன் என சாச்சியின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் ஸ்லோகனுக்கு ஏற்ப எனது குழந்தை பிறந்த இரண்டு நிமிடங்களில் ஆதார் பெற முடிவு செய்தோம் என தெரிவித்தார்.

    பிறந்த 1.48 நிமிடங்களில் ஆதார் பெற்ற நிலையில் குழந்தை சாச்சி இந்தியாவிலேயே மிக குறுகிய காலகட்டத்தில் ஆதார் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு உதவியாக இருந்த நண்பர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாச்சியின் தந்தை தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், சாச்சியின் தந்தை தன் குழந்தை பிறந்ததும் ஆதாரில் பதிவு செய்திருக்கும் சம்பவம் சாதனையாகியுள்ளது.
    Next Story
    ×