search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலாற்றில் முதன்முறையாக 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி
    X

    வரலாற்றில் முதன்முறையாக 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி

    வரலாற்றில் முதன்முறையாக 1.75 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார். #Haj #Mecca
    மும்பை:

    முஹம்மது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர்.

    பத்து லட்சம் பேர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து கடந்த (2017) ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

    ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

    இதற்கிடையில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக கடந்த 16-1-2018 அன்று அறிவிப்பு வெளியானது.



    இதுதொடர்பாக, கடந்த 27-2-2018 அன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம்பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

    கண்ணியமான முறையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றும் குறிப்பிட்ட அவர், ஹஜ் மானியத்துக்காக செலவழிக்கப்படும் தொகை இனி சிறுபான்மையினத்தவர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், மும்பையில் உள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி, நமது நாட்டின் சுதந்திரத்துக்கு பின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 25 முஸ்லிம்கள் இந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

    இவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து இரண்டு யாத்ரீகர்கள் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் செய்யவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 47 சதவீதம் பெண்கள். இதுதவிர தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக 47 ஆயிரத்து 23 பேர் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதன்முறையாக ஆண்களின் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் யாத்திரை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

    அகமதாபாத் நகரில் இருந்து 6700 யாத்ரீகர்கள், அவுரங்காபாத் நகரில் இருந்து 350 யாத்ரீகர்கள், பெங்களூரு நகரில் இருந்து 5550 யாத்ரீகர்கள், போபால் நகரில் இருந்து 254 யாத்ரீகர்கள், கொச்சி நகரில் இருந்து 11,700 யாத்ரீகர்கள், சென்னையில் இருந்து 4000 யாத்ரீகர்கள், டெல்லியில் இருந்து 19,000 யாத்ரீகர்கள், கயா நகரில் இருந்து 5140 யாத்ரீகர்கள், கோவாவில் இருந்து 450 யாத்ரீகர்கள், கவுகாத்தியில் இருந்து 2950 யாத்ரீகர்கள், ஐதராபாத்தில் இருந்து 7600 யாத்ரீகர்கள், ஜெய்ப்பூரில் இருந்து 5500 யாத்ரீகர்கள், கொல்கத்தாவில் இருந்து 11,610 யாத்ரீகர்கள், லக்னோவில் இருந்து 14,500 யாத்ரீகர்கள், மங்களூருவில் இருந்து 430 யாத்ரீகர்கள், மும்பையில் இருந்து 14,200 யாத்ரீகர்கள், நாக்பூரில் இருந்து 2800 யாத்ரீகர்கள், ராஞ்சியில் இருந்து 2100 யாத்ரீகர்கள், ஸ்ரீநகரில் இருந்து 8950 யாத்ரீகர்கள் மற்றும் வாரணாசி நகரில் இருந்து 3250 யாத்ரீகர்கள் புறப்பட்டு செல்வார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் அவர் வெளியிட்டார்.

    ஆண்களின் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை செல்ல விண்ணப்பித்திருந்த 1308 பெண்களின் விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் சேர்க்கப்படாமல் நேரடியாக அனுமதி அளிக்கப்பட்டதையும் முக்தார் அப்பாஸ் நக்வி சுட்டிக்காட்டினார். #Indians #Haj #Mecca #MukhtarAbbasNaqvi
    Next Story
    ×